புதன், மே 01, 2013

ராமதாஸ் சிறையில் அடைப்பு !

  • விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். சென்னையில் காடு வெட்டி குருவும் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.  மரக்காணம் கலவரம் தொடர்பாக ஐகோர்ட் நீதிபதியை கொண்டு நீதிவிசாரணை நடத்த வேண்டும், கலவரத்தில் 2 பேர் பலியானதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.

    விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த 10 நிபந்தனைகளுடன் டிஎஸ்பி சங்கர் நேற்று முன்தினம் அனுமதி வழங்கினார். ஆனால், அன்று இரவே சட்டம்,ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்தது. எனவே, ஐஜி கண்ணப்பன், காஞ்சிபுரம் டிஐஜி சத்தியமூர்த்தி தலைமையில் விழுப்புரத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் இருந்து நேற்று காலை ராமதாஸ் புறப்பட்டார். விழுப்புரம் நகருக்குள் அவருடைய கார் வந்தபோது விழுப்புரம், காட்பாடி ரயில்வே கேட்டில் டிஐஜி முருகன், தடுத்து நிறுத்தி கைது செய்யப் போவதாக கூறினார். ஆனால், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றபிறகு கைது செய்யுமாறு ராமதாஸ் கூறினார். இதையடுத்து, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல ராமதாசுக்கு டிஐஜி முருகன் அனுமதித்தார்.

    விழுப்புரம் ரயில் நிலைய வளாகப் பகுதிக்கு பகல் 12 மணிக்கு ராமதாஸ் வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் பாமக தலைவர் ஜி.கே.மணி, செஞ்சி எம்எல்ஏ கணேஷ்குமார், முன்னாள் எம்பி தன்ராஜ், முன்னாள் எம்எல்ஏ கலிவரதன் உட்பட 511 பேர் கைதாகினர். இதில் 9 பேர் பெண்கள். ராமதாஸ் உட்பட 70 பேர், போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் விழுப்புரத்தில் உள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல் (143), கூட்டு சதி செய்தல் (188), அரசுக்கு எதிராக குற்றமுறு சதி செய்தல் (7(1)ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    நேற்று இரவு மாஜிஸ்திரேட் முகிலாம்பிகை, திருமண மண்டபத்துக்கு வந்தார். அப்போது, தொண்டர்களை முதலில் காவல் நீடிப்பு செய்த பிறகு கடைசியாக தான் சிறைக்குச் செல்வதாக ராமதாஸ் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தொண்டர்களின் பெயரைக் குறிப்பெடுத்துக் கொண்ட மாஜிஸ்திரேட் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சுமார் 279 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். ராமதாஸ் திருச்சி அல்லது சென்னை சிறை யில் அடைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கடைசியில் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக