சென்னை: தமக்கு வாய்ப்பு கிடைத்தால் தமது மகன் மு.க.ஸ்டாலின் பெயரை திமுக தலைவர் பதவிக்கு முன்மொழிவேன் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தமக்குப் பின்னால் மு.க.ஸ்டாலின்தான் அடுத்த திமுக தலைவர் என்பதை கோடிட்டுக் காட்டிப் பேசிவருகிறார் கருணாநிதி. சில நாட்களுக்கு முன்பு கூட இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கு கருணாநிதியின் மற்றொரு மகனும் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி கடுமையாக வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அழகிரி எதிர்ப்பு "வாரிசுகளை தலைவராக்க திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று சொன்னவரே கருணாநிதிதானே..அவரிடமே போய் கேளுங்கள்" என்று கொந்தளித்திருந்தார் அழகிரி. இதே கடுப்போடு சென்னையில் கருணாநிதியை சந்திக்க அழகிரி முயற்சித்துப் பார்த்தார். ஆனால் கருணாநிதி தவிர்த்துவிட்டார். இதனால் கடுமையான அதிருப்தியில் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் இருக்கின்றனர். மாவட்ட செயலர்கள் கூட்டம் இந்த நிலையில் இன்று திமுகவின் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரிக்காத அரசைக் கண்டித்து வரும் 19-ந் தேதி கண்டன போராட்டம் நடத்தப்படும், பாலியல் பலாத்கார குற்றவாளிகள் மீது குண்டாஸ் பயன்படுத்த எதிர்ப்பு, பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகும் பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவர் பதவிக்கு ஸ்டாலின் இந்த தீர்மானங்களை செய்தியாளர்களிடம் விளக்கிய கருணாநிதியிடம் அடுத்த தலைவர் ஸ்டாலின் தானா? என்பது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், சமுதாயப் பணியில்தான் தமக்க்குப் பின்னர் ஸ்டாலின் என்று கூறியிருந்தேன். சில பத்திரிகைகள் விஷமத்தனமாக செய்திகளை வெளியிட்டுவிட்டன. பத்திரிகை செய்தியைப் பார்த்து யாராவது எதிர்த்து இருந்தால் அது அறியாமை.(அழகிரிதான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்) தலைவர் பதவிக்கே என்று கூறியிருந்தாலும் அதில் தவறில்லை. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வரக்கூடாதா? திமுக ஒரு ஜனநாயக இயக்கம். இதில் யாரும் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம்..வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலின் பெயரை திமுக தலைவர் பதவிக்கு முன்மொழிவேன். தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தால் என்ன தவறு? கட்சியின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன், ஏற்கெனவே கட்சித் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். அன்பழகன் முன்மொழிந்த பின்னர் தாம் வழிமொழிந்ததாகவே அர்த்தம் என்றும் கூறியுள்ளார். கருணாநிதியின் இந்த திட்டவட்டமான அறிவிப்பைத் தொடர்ந்தி திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் ஸ்டாலினை தலைவராக ஏற்க மறுக்கும் அழகிரியால் திமுகவில் பெரும் உட்கட்சி மோதல் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக