சென்னை:பாலியல் குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனையை விட ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைப்பதே கடுமையான தண்டனை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவருகிறது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்பதுடன், அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை
வழங்கப்பட வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தமிழகத்தில் குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்க அது பயன்படுத்தப்படுவதாகவும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை தான் வழங்க வேண்டுமென்று பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கூறிவரும் நிலையில், நான் ஒருவன் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை என்பது, அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச்சிறையில் அடைத்து வைக்க வேண்டும்; அதைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தேன்.
அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தால் ஓராண்டு காலத்தில் அந்த குற்றவாளிகள் வெளியே வந்து விடுவார்கள். வெளியே வந்து மீண்டும் பாலியல் குற்றம் புரியமாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.சமூக சிந்தனையாளர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோரை போலவே தூக்குத்தண்டனை என்பதை நானும் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை.
அதனால்தான் இந்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனையாக ‘‘ஆயுள் முழுவதும் தனிமைச்சிறையிலே அடைக்க வேண்டும் என்பதை என் கருத்தாக தெரிவித்தேன். இந்த கருத்து பற்றி மாநில அரசு சீர்தூக்கி பார்க்க மறுத்துவிட்டாலும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக