செவ்வாய், ஜனவரி 08, 2013

அடக்கம் செய்த உடலை வைத்து பாடைகட்டி பழகிய கொடூரன் !

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து வீசிய வாலி பர் கைது செய்யப்பட்டார். வேலூர் அடுத்த கருகம்புத்தூர் பாலாற்றங்கரையில் சுடுகாடு உள்ளது. இங்கு இளம்பெண் சடலம் ஒன்று முகம் மூடிய நிலையில் அரைகுறை ஆடையுடன் கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் நேற்று காலை பார்த்தனர். தகவல் பரவியதால் கூட்டம் கூடியது. விரிஞ்சிபுரம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பெண் சடலத்தின் தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்தது. வெட்டி தைத்ததற்கான அறிகுறிகளும் காணப்பட்டன. கொலை, நரபலி என பலவாறாக மக்கள் பேசியதால் பரபரப்பான சூழல் உருவானது. அந்த பெண் கருகம்புத்தூரை சேர்ந்த சீனிவாசன் ராணி தம்பதியின் மகள் சிவகாமி (25) போல இருப்பதாக சிலர் கூறினார்கள். உடனடியாக அவரது தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  அவர் பதறியடித்து சுடுகாட்டுக்கு வந்தார். பிஎஸ்சி பட்டதாரியான சிவகாமி, வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் கடும் தலைவலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தலையில் இருந்த கட்டி ஆபரேஷன் செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி சிவகாமி இறந்தார். வேலூர் ஜி.ஹெச்.சில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, கருகம்புத்தூர் சுடுகாட்டில் 3ம் தேதி உடலை அடக்கம் செய்தோம் என்று சீனிவாசன் கூறினார். வேலூர் டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் பூஞ்சோலை, சரவணன், திருநாவுக்கரசு மற்றும் தடயவியல் நிபுணர் பாரி ஆகியோர் இளம்பெண் சடலத்தையும், அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டனர். சுடுகாடு பகுதியில் நடமாடியவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

அதே பகுதியை சேர்ந்த வடிவேலன் (33) என்பவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தனர். சடலத்தை தோண்டி எடுத்ததை ஒப்புக்கொண்டார். அவர் சொன்ன காரணம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் அளித்த பகீர் வாக்குமூலம்: என் அப்பா ரங்கநாதன், பாடை கட்டும் தொழில் செய்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது தொழிலை செய்ய விரும்பினேன். இதே தொழிலை செய்து வந்த வேறொருவரிடம் சென்று வேலையில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறினேன். ‘உனக்கு இதை பற்றி தெரியாது. சொன்னாலும் புரியாது’ என்று கூறி அனுப்பிவிட்டார். 

அவர் கட்டிய பாடையில்தான் சிவகாமி உடலை சுடுகாட்டுக்கு எடுத்து வந்து புதைத்தார்கள். அதை வைத்தே வேலையை கற்றுக்கொள்ள முடிவெடுத்தேன். கடந்த 5ம் தேதி இரவு சுடுகாட்டுக்கு வந்தேன். பாடை கட்டி பயிற்சி பெறுவதற்காக, புதைக்கப்பட்ட சிவகாமி சடலத்தை வெளியே எடுத்தேன். அதன் காலை பிடித்து சுடுகாட்டின் வேறொரு பகுதிக்கு இழுத்து சென்றேன். உடைகள் கழன்று வந்துவிட்டன. பிறகு குச்சிகளை வைத்து பாடை கட்டி பழகினேன். அதற்குள் பொழுது விடிந்து விட்டது. மண்டபத்தில் ஒரு ஓரமாக உடலை வீசிவிட்டு போய்விட்டேன். இவ்வாறு வடிவேலன் வாக்குமூலம் அளித்தார். இ.பி.கோ. 297வது பிரிவில் (சடலத்தை அவமதித்தல்) வழக்கு பதிவு செய்து, வடிவேலனை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக