கட்சி விழாவில், குத்துப் பாடலுக்கு நடனமாடிய பெண்கள் மீது, திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்து, குஷியின் உச்சத்துக்குச் சென்றது, மேற்கு வங்கத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, பெண்கள் அமைப்புகள், "வழக்கம் போல்' கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இக்கட்சி நிறுவப்பட்டதன், ஆண்டு விழா, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று முன்தினம் இரவு நடந்தது.பாங்கர் என்ற இடத்திலும், கட்சி
நிர்வாகிகள் சார்பில், விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கிய நிர்வாகிகள் உரையாற்றி முடித்ததும், கலை நிகழ்ச்சி என்ற பெயரில், குத்துப் பாடல்களுக்கு, இளம் பெண்கள், நடனமாடும் நிகழ்ச்சி நடந்தது.
இளம் பெண்கள் நடனமாடத் துவங்கியதும், கட்சியின் மூத்த நிர்வாகிகள், சிலருக்கு, குஷி ஏறிவிட்டது. திரிணமுல் கட்சியின், மேலும் சில நிர்வாகிகளும், மேடையில் ஏறியதுடன், நடனமாடிய இளம் பெண்கள் மீது, ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்து, தாங்களும் சேர்ந்து, குத்தாட்டம் போட்டனர்.
நேரம், செல்ல செல்ல, குத்தாட்டத்தின், "டெம்போ' எகிறியதால், போலீசார் விரைந்து வந்து, நிகழ்ச்சியை தடை செய்தனர்.இந்த விவகாரம், மேற்கு வங்க அரசியலில், சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.தேசிய பெண்கள் ஆணைய தலைவர் மம்தா கூறியதாவது:அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், மகிழ்ச்சியை, இப்படியா வெளிப்படுத்துவது? இது, மிகவும் அவமானகரமான விஷயம். இது போன்ற விஷயங்களில், அரசியல்வாதிகளின் மனதில், மாற்றம் ஏற்பட வேண்டும்.இவ்வாறு மம்தா கூறினார்.
நடவடிக்கை
திரிணமுல் காங்., - எம்.பி., டெரெக் ஒ பிரெய்ன் கூறியதாவது:கட்சி துவங்கப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில், மாநிலம் முழுவதும், ஆயிரக்கணக்கான விழாக்கள் நடந்தன. இதில், ஒரு சில இடங்களில், இதுபோல் நடந்திருக்கலாம். இதற்காக, ஒட்டு மொத்தமாக, திரிணமுல் காங்., மீது குற்றம் சாட்டக் கூடாது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது, இரண்டு நாட்களுக்குள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு டெரக் ஒ பிரெய்ன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக