ஞாயிறு, ஜனவரி 06, 2013

பூமியின் மிக அருகே வரும் விண்கல்: செயற்கை கோள்களுக்கு ஆபத்து !

ஸ்பெயின்: எதிர்வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி விண்வெளியில் வலம் வந்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் வரவிருப்பதாக விண்வெளி விஞ்ஞானிகள் அறிவித்துள்ள நிலையில் அதை கண்காணிக்க, சர்வதேச விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளனர். மாயன் காலண்டர் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி கற்பனையான விண்கல் ஒன்று பூமியின் மீது மோதப்போவதாக இணையதள தகவல்கள் வெளியாகி அவை
அறிவியல் உலகின் கவனத்தை ஈர்த்தது. மக்களில் பலர் அதை நம்பினர். ஆனால் அந்தத் தகவல் பொய்யானது என்று நிரூபணமாகி விட்ட நிலையில் மற்றொரு அதிர்ச்சித் தகவலை ஸ்பெயின் நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி 2012 DA 14 என்று பெயரிடப்பட்டுள்ள மிகப்பெரிய விண்கல் பூமிக்கு மிக அருகில்  35 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில்  கடந்து செல்ல இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல் பூமியைப் போலவே 366.2 நாட்களுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி 2 கோடியே 60 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து சென்ற இந்த விண்கல், இந்த முறை வெறும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது. இதனால் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் இதன் பாதையில் குறுக்கிடுவதால் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக