செவ்வாய், ஜனவரி 08, 2013

பாலியல் குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றம்: தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் கடிதம் !!

புதுடெல்லி: பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல்  குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டுமென்று அனைத்து மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,"டெல்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் விசாரணையும்,தீர்ப்பும் தாமதமாவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிகரிக்கச் செய்கிறது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டியது அவசியம். இந்த நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக மாநில அரசுகளுடன் உயர் நீதிமன்றம் பேச வேண்டும்.இது விஷயத்தில் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.

எனவே செஷன்ஸ் நீதிபதிகள்,மாஜிஸ்திரேட் என எத்தனை பதவிகள் இதற்காக உருவாக்கப்பட வேண்டும் என்பதை கணக்கிட்டு, மாநில அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். நீதிபதிகள் மட்டுமல்லாமல் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும், இதர பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் உயர் நீதிமன்றங்களின் நியாயமான கோரிக்கைகளை மாநில அரசுகள் நிராகரிக்க முடியாது.

டெல்லியில் மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம் வேறு யாருக்கும் நிகழக்கூடாது.பாலியல் பலாத்காரம் உடல்ரீதியான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மட்டுமல்ல, ஆன்மாவையும் பாதிக்கும் செயல். 

உயர் நீதிமன்றங்களிலும், பிற கீழமை நீதிமன்றங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

இது தொடர்பாக ஏப்ரல் மாதம் நடைபெறும் தலைமை நீதிபதிகள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.ஆனால் அதற்கு முன்பு மேற்கூறப்பட்ட முக்கிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும் நீதிக்காக காக்க வைக்கப்படுவது பெரும் கவலையை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக