சனி, ஜனவரி 05, 2013

செல்லாக் காசு யார்?, செல்லரித்த காசு யார்??என்று விரைவில் தெரியும் : கருணாநிதி !!

”’தற்கொலை செய்து கொண்ட ஒருவர், தன் சாவுக்கு அமைச்சரின் தம்பிதான் காரணம் என்று தன் கைப்பட கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்த வழக்கின் மீதே நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்றம் வரை சென்ற பிறகும் அந்த வழக்கையே இல்லாமல் செய்வதற்கான முயற்சியிலே ஈடுபடுபவர்களுக்கு என்னைப் பார்த்தால் செல்லாக் காசாகத்தான் தெரியும். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்கின்ற காலம் விரைவிலே வரும். அப்போது செல்லாக்காசு யார், செல்லரித்தகாசு யார் என்பதெல்லாம் உலகத்திற்குப் புரியும்.”’ என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்””எதிர்க்கட்சிக்காரர்கள் மீது ஆளுங்கட்சி வழக்கு தொடர்வதும், அவர்கள் ஆளுங்கட்சியில் உறுப்பினராக சேர்ந்து விட்டால் அவர்கள் மீதான வழக்குகளை அரசு வாபஸ் பெறுவதும் எதைக் காட்டுகிறது?
வழக்குகளைப் போட்டுப் பயமுறுத்தி, மிரட்டி எதிர்க்கட்சிக் காரர்களை ஆளுங்கட்சியிலே சேர்ப்பதற்கான முயற்சியிலே இந்த அரசு ஈடுபடுகிறது என்பதற்கான உதாரணங்கள்தான் இவை! எதிர்க்கட்சி என்றால் வழக்கு – ஆளுங்கட்சியிலே சேர்ந்துவிட்டால் வாபஸ் – எப்படிப்பட்ட ஜனநாயகம் தமிழகத்திலே கொடிகட்டிப் பறக்கிறது?
அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா எம்.ஜி.ஆர். பொறுப்பில் இருந்தபோது கட்சியில் இருந்த நிதி ஒரு லட்சம் என்றும், இப்போது 118 கோடி சொத்து என்றும் பேசியிருக்கிறாரே?
எம்.ஜி.ஆர். அவர்களின் திறமையையும், தன்னுடைய திறமையையும் ஒப்பிட்டுக் காட்டுவதற்காக அதைக் கூறியிருக்கிறார் போலும்! இந்த அளவிற்கு சொத்து சேர்க்கும் திறமை யாருக்கும் இல்லைதான்!
அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய தமிழக நிதி அமைச்சர் உங்களை செல்லாக்காசு என்றும், செல்லரித்த காசு ஒன்று உங்களோடு கூட்டுச் சேரப் போவதாகவும் விமர்சனம் செய்திருக்கிறாரே?
நிதி அமைச்சர் அல்லவா? அதனால்தான் காசைப் பற்றிப் பேசியிருக்கிறார். நான்தான் செல்லாக்காசு ஆயிற்றே, பிறகு ஏன் பொதுக்குழு முழுவதும் என்னைப்பற்றியே பேச்சு? என்னைக் கண்டித்து ஏன் தீர்மானம்? தற்கொலை செய்து கொண்ட ஒருவர், தன் சாவுக்கு அமைச்சரின் தம்பிதான் காரணம் என்று தன் கைப்பட கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்த வழக்கின் மீதே நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்றம் வரை சென்ற பிறகும் அந்த வழக்கையே இல்லாமல் செய்வதற்கான முயற்சியிலே ஈடுபடுபவர்களுக்கு என்னைப் பார்த்தால் செல்லாக் காசாகத்தான் தெரியும்.
ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்கின்ற காலம் விரைவிலே வரும். அப்போது செல்லாக்காசு யார், செல்லரித்தகாசு யார் என்பதெல்லாம் உலகத்திற்குப் புரியும்.
சென்னையில் 34 வயதே ஆன ஆட்டோ டிரைவர் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்து மாண்டிருக்கிறாரே?
ஏழுமலையின் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி பழுதாகிவிட்டது. போலீசார் வழக்கு எதுவும் உடனடியாக பதிவு செய்யவில்லை. மோட்டார் சைக்கிள் காரர் பழுதை சரி செய்தால் போதுமென்று கூறியிருக்கிறார். ஏழுமலை; தான் மோட்டார் சைக்கிள் மீது மோதவில்லை என்றும், மோட்டார் சைக்கிள் காரர்தான் தன் ஆட்டோ மீது மோதியதாகவும் கூறியிருக்கிறார். இதற்குப் பிறகும் போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் ஏழுமலையை பலமாகத் தாக்கியதாகவும், அந்தச் செய்தியை தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாகவும், உடனே பதறிப்போய் தன் குழந்தைகளுடன் போலீஸ் நிலையத்திற்குச் சென்று அவர்கள் கேட்ட அபராதத் தொகை 2,500 ரூபாயை செலுத்தி விட்டு ஆட்டோவுடன் வீடு திரும்பியதாக ஆட்டோ டிரைவரின் மனைவி கூறுகிறார்.
காவல் நிலையத்தில் தன்னை அவமானப்படுத்தி விட்டார்களே என்பதற்காக அந்த ஆட்டோ டிரைவர் காவல் நிலையத்தின் வாசலில் தீக்குளித்து மாண்டு விட்டார். போன உயிர்போனதுதான். இதற்குக் காரணம் யார்? போலீசாரின் அடக்குமுறைதானே? அரசு என்ன செய்யப் போகிறது? ஊரை ஏமாற்றுவதற்காக இரண்டு போலீசாரை தற்காலிகப் பணி நீக்கம் செய்து விட்டு, பின்னர் யாருக்கும் தெரியாமல் அவர்களை மீண்டும் பணியிலே சேர்த்து விடுவார்கள். பாபம்! அந்த ஆட்டோ டிரைவரின் மனைவித் தன் இரண்டு குழந்தைகளுடன் இனி என்ன செய்வார்?
இதுவே தி.மு.கழக ஆட்சியில் நடைபெற்றிருந்தால், “இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதல் அமைச்சர் பதவி விலக வேண்டும்” என்று அறிக்கை விடுத்திருப்பார்! ””என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக