சனி, ஜனவரி 05, 2013

இனி 16 வயதானாலே மேஜர்! – அனைத்து மாநிலங்களும் ஒப்புதல்!!


16 வயதை கடந்தாலே மேஜராக கருதி குற்ற வழக்கில் தண்டனை அளிக்க வேண்டும் என்று டெல்லியில் அமைச்சர் ஷிண்டே தலைமையில் நடந்த டி.ஜி.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.அதே சமயம் பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிபதற்கு ஒருமித்த கருத்து ஏற்ப்படவில்லை என ஷிண்டே தெரிவித்தார். டெல்லியில் இன்று உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கற்பழிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் அதிகபட்ச தண்டனை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு அனைத்து மாநிலங்களும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதேபோல் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளிகளை பரோலில் அனுப்புவது பற்றியும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
எனினும், சிறுவர்களுக்கான வயது வரம்பினை 18-ல் இருந்து 16 வயதாக குறைக்க அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன. அதாவது, குற்றம் செய்தவர்கள் 16 வயதுக்கு மேற்பட்ட யாராக இருந்தாலும் வயது வந்தவர்களாக நினைத்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருந்தது.
கடந்த மாதம் டெல்லியில் மாணவியை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 6 பேரில் ஒருவர் மைனர் என்பதால் மற்ற 5 பேர் மீது மட்டுமே கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட 6-வது குற்றவாளியான மைனர்தான், மாணவியிடம் மிகவும் கொடூரமாக நடந்ததாகவும், மாணவி சுயநினைவற்று மயங்கி கிடந்தபோது கற்பழித்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த குற்றவாளியின் வயது 17 என்று பள்ளி சான்றிதழில் உள்ளது. எனவே, எலும்பு சோதனை அவன் 18 வயதுக்கு மேற்பட்டவன் என்பதை நிரூபிக்கத் தவறினால், அவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.
தண்டனையும் குறைந்தபட்சமாகத்தான் இருக்கும். எனவே, சிறுவன் என்ற போர்வையில் கொடிய குற்றவாளிகள் தப்பித்துவிடக்கூடாது என்பதில் அனைத்து மாநிலங்களும் உறுதியாக இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக