டெல்லியில் 6 பேரால் கற்பழித்து கொல்லப்பட்ட மாணவி உடல் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது. மாணவி வீட்டுக்கு அவரது தோழிகளும் உறவினர்களும் வந்தபடி உள்ளனர். இதனால் நேற்று மாணவி வீடு சோகத்தில் மூழ்கி இருந்தது. துக்கம் விசாரிக்க நிறைய பேர் வந்தபடி இருந்ததால் மாணவியின் தாய் எப்போதும் அழுது கொண்டே இருந்தார். இதையடுத்து அவரை உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். அதன்படி மாணவி பெற்றோர் நேற்று விமானத்தில் டெல்லியில் இருந்து காசிக்கு சென்றனர். பிறகு அங்கிருந்து பல்லியா மாவட்டத்தில் இருக்கும் அவர்களது பூர்வீக கிராமமான மந்த்வாரா கலன் கிராமத்துக்கு சென்றனர்.
அங்கு மாணவி பெற்றோரை கிராமத்தினர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். கிராமத் தலைவர் சிவமந்திர் சிங் தலைமையில் இரங்கல் கூட்டமும் நடந்தது.
இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாணவி அஸ்தி பதுலியா கேட் என்ற இடத்தில் கங்கையில் கரைக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே மாணவி குடும்பத்துக்கு உத்தரபிரதேச மாநில அரசு ரூ. 20 லட்சம் உதவி தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளது. மேலும் மாணவி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநில அரசும் மாணவி குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் உதவி தொகையும் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக