சிரியா பிரச்னையில் மேலைநாடுகள் கண் மூடித்தனமாக தேசிய விடுதலைப் படையினருக்கு ஆதரவளித்து வருவதாக பிரான்ஸ் நாட்டின் வலதுசாரிக் கட்சியின் தலைவரான லீ பென் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஜனாதிபதி பஷர்அல் -ஆசாத் பதவி விலக கோரி பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் அங்கு சண்டை நடந்து வருகிறது. 22 மாதங்களாக நடந்து வரும் போரில் 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளனர்.
முக்கிய நகரங்களில் சண்டை நடப்பதால் அத்தியாவசிய பொருட்களின் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. சண்டை காரணமாக தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் வேலையின்றியும், உணவு இன்றியும் மக்கள் தவிக்கின்றனர்.
ஐ.நா. சபை வழங்கும் உணவை பயன்படுத்தி வருகின்றனர். சிரியாவில் தவிக்கும் 25 லட்சம் பேரில் 15 லட்சம் பேருக்கு ஐ.நா. உணவு வழங்கி வருகிறது. 10 லட்சம் பேருக்கு உணவு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது. எனவே இவர்கள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் நாட்டின் வலதுசாரிக் கட்சியின் தலைவரான லீ பென் கூறுகையில், சிரியா பிரச்னையில் மேலைநாடுகள் கண் மூடித்தனமாக தேசிய விடுதலைப் படையினருக்கு ஆதரவளித்து வருகிறது.
லிபியாவில் ரகசியமாக செய்ததை சிரியாவில் பகிரங்கமாகச் செய்கிறார்கள் என்று மேலைநாடுகள் சிரியா போருக்கு அளித்து வரும் ஆதரவைக் குற்றம்சாட்டிப் பேசினார்.
இவர்கள் சிரியாவின் உள்நாட்டுப் போருக்கு அளித்துவரும் ஆதரவால் அதிகமாகப் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே எனவும் கவலை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக