ஜோர்டான் நாட்டில் உள்ள ஜோ சாட் என்ற தனியார் டெலிவிஷன் சேனல், சிரியா விவகாரம் பற்றி ஒரு நேரடி விவாதத்துக்கு ஏற்பாடு செய்தது. அதில், முகமது ஷாவப்கா என்ற எம்.பி.யும், மன்சூர் சய்ப் அல்-தி முராட் என்ற அரசியல் பிரமுகரும் பங்கேற்றனர்.சிரியா விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. திடீரென தனிப்பட்ட முறையில் வசைபாடத் தொடங்கி விட்டனர். எம்.பி.யை பார்த்து, `நீ இத்தாலி உளவுப்படையின் ஏஜெண்டு' என்று
முராத் கூறினார். உடனே சூடான எம்.பி., `நீ ஒரு ரவுடி' என்று கூறியபடி, தனது ஷுவை கழற்றி முராத் மீது எறிந்தார்.
இதனால் அவமானம் அடைந்த முராத், தனக்கு முன்பிருந்த மேஜையை தள்ளிவிட்டு, எம்.பி.யை நோக்கி முன்னேறினார். அந்த கட்டத்தில், யாரும் எதிர்பாராதவிதமாக எம்.பி. தனது `கோட்' பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து முராத்தை நோக்கி குறி வைத்தார்.
நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த முகமது ஹபாஷ்நேவுக்கு தர்மசங்கடமாகி விட்டது. அவர் இருவரையும் சமாதானப்படுத்த பெரிதும் போராடினார். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த சேனல் நிர்வாகம், வேறு நிகழ்ச்சிக்கு தாவிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக