திங்கள், ஜூலை 23, 2012

பிரணாப் முகர்ஜியின் வெற்றியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் : சங்மா !

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வாய்ப்புள்ளது என்று பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற பி.ஏ.சங்மா தெரிவித்தார்.
 பி.ஏ.சங்கமா தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:இந்தத் தேர்தல் பாரபட்சமுடனும், அரசியல் சார்புடனும் நடைபெற்றுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அரசு, தனது வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில் சில மாநிலங்களின் அரசுகளுக்கு பொருளாதார சலுகைகள் மற்றும் நிதி உதவி வழங்கியது.
 தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், உத்தரப் பிரேதச மாநில அரசுக்கு ரூ.57 ஆயிரம் கோடியும், பிகார் மாநில அரசுக்கு ரூ.27 ஆயிரம் கோடியும் வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முலாயம் சிங், மாயாவதி போன்றவர்கள் மிரட்டல் விடுக்கப்பட்டு, அடிபணியவைக்கப்பட்டனர்.
 தேர்தலில் ரகசியம் காக்கப்படவில்லை. மக்களவை மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களில் நடத்தை விதிமுறைகள் இருப்பது போல, குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கும் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறும்.
 இந்தத் தேர்தலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன். ஜனநாயகத்தை காப்பதற்காக நீதிமன்றத்துக்கு செல்வதுதான் சரியானது. எனினும், இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
 வடகிழக்கு மாநில மக்கள், தங்களது சொந்தக் காலில் நிற்க இயலாதவர்கள். அவர்கள் 100 சதவீதம் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், என்னை ஆதரிப்பதன் முலம், மத்திய அரசுக்கு எதிராகச் செல்ல அவர்கள் விரும்பவில்லை.
 ஜனநாயகத்தில் அனைவரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது; சிலர் தோல்வி அடையத்தான் வேண்டும். அதுதான் ஜனநாயக விளையாட்டு என்றார் பி.ஏ.சங்மா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக