மங்களூர்:3 ஆண்டுகளுக்கு முன்பு மங்களூரில் பப்கள் மீது நடத்திய தாக்குதலைப் போன்றதொரு சம்பவம் மீண்டும் அங்கு அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரின் புறநகர் பகுதியான பாடிலுவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று இரவு மது விருந்து நடந்தது. அதில் அரை குறை ஆடையணிந்த இளம் பெண்களும், வாலிபர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்து நடப்பது பற்றி தகவல் அறிந்த இந்து ஜகரன் வேதிகே
அமைப்பைச் சேர்ந்த 50 பேர் அந்த ரிசார்டுக்குள் புகுந்து அங்கிருந்த இளம் பெண்களையும், வாலிபர்களையும் ஓட, ஓட அடித்து உதைத்தனர். இதில் 2 பெண்களும், பல வாலிபர்களும் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம் பெண்களையும், வாலிபர்களையும் அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றினர். அந்த கும்பலைச் சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு உள்துறை அமைச்சர் அசோகாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கர்நாடக மாநில பெண்கள் நல கமிஷன் தலைவர் மனுலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அரசு தண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக