சென்னை தாம்பரம் அருகே முடிச்சூரில் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக தவறி விழுந்த குழந்தை சுருதி அதே பஸ்சில் அடிபட்டு இறந்தார். இதையடுத்து அந்த பேருந்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டமும் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை ஏற்று விசாரணை நடத்தியது. அப்போது, போக்குவரத்து துறை அதிகாரிகள் நாளை நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் சிறுமியின் சாவுக்கு காரணமான பள்ளி பேருந்துக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் எப்.சி. (தகுதிச்சான்று) வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் விபத்துக்கு முக்கிய காரணம், போக்குவரத்து துறை அதிகாரிகள்தான் என்ற வலுவான குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த பேருந்துக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கிய தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பட்டப்பசாமி மற்றும் தாம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக ஜியோன் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதில், பேருந்தில் இருந்து விழுந்து மாணவி சுருதி இறந்தது எப்படி? என்பது குறித்தும், பேருந்து முறைப்படி பராமரிக்கப்பட்டதா? என்பது பற்றியும் உரிய விளக்கம் தரவேண்டும் வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக