சென்னை: அமெரிக்காவின் "டைம்" பத்திரிகையின் முகப்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் "தி அன்டர் அச்சீவர்" என்ற தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டதற்கு பதிலடியாக இந்தியாவின் அவுட்லுக் ஏடு தமது இதழின் முகப்பில் அமெரிக்க அதிபர் ஒபாமா "தி அன்டர் அச்சீவர்" என்ற தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அண்மையில் மன்மோகன் சிங்கின் செயல்பாடுகளை விமர்சித்து டைம் பத்திரிகை கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் உருப்படியாக எதையும்
சாதிக்காதவர் மன்மோகன் சிங் என்றும் நிழல் மனிதர் என்றும் விமர்சித்திருந்தது. பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இந்தியா தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் செயல்பாடுகளை மிகவும் கடுமையாகத் தாக்கியிருந்தது.இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வெளிவரவுள்ள அவுட்லுக் இதழில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை வறுத்தெடுத்து கட்டுரை ஒன்றை பதிவு செய்திருக்கிறது. அட்டையின் முகப்பில் எப்படி மன்மோகன்சிங் படத்தைப் போட்டு விமர்சித்திருந்ததோ அதேபோல் ஒபாமா படத்தை விமர்சித்திருக்கிறது அவுட்லுக்.
மன்மோகன்சிங் படத்தைப் போட்டு "முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது" என்று எப்படி விமர்சித்திருந்ததோ அதே பாணியில் ஒபாமா படத்தின் கீழ் "முதலில் இருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர் ஒபாமா " என்றும் குறிப்பு போட்டு ஆப்படித்திருக்கிறது அவுட்லுக்
இந்தியாவின் நேரடிய அன்னிய முதலீட்டுக்கான கதவுகளைத் திறந்தாக வேண்டும் என்ற தொனியில் அண்மையில்கூட அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருந்தார். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதன் விருப்பத்திற்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கைகளை இந்தியா உருவாக்க வேண்டும் என்று கருதியே அதிபர் முதல் ஊடகங்கள் வரை கருத்துப் பரப்பலை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் கொள்கை முடிவுகள் விஷயத்தில் இந்தியா தன்னிச்சையாகவே செயல்படும் என்று அண்மையில் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக