
1914-ஆம் ஆண்டு பழைய மெட்ராஸில் பிறந்த ஸெகாலின் தந்தை பிரபல வழக்கறிஞர் டாக்டர். சுவாமிநாதன் ஆவார்.
மருத்துவ படிப்பை முடித்துவிட்டு குடும்ப உறுப்பினரான வி.பி.மேனோனின் சிங்கப்பூர் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்ற துவங்கினார். அவ்வேளையில்தான் ஸெகால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஷை சந்தித்து சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து பணியாற்றத் துவங்கினார். பின்னர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் மகளிர் பிரிவு தலைவர் ஆனார். இதனைத் தொடர்ந்து அவர் கேப்டன் லட்சுமி ஸெகால் என அழைக்கப்பட்டார்.
இந்திய தேசிய ராணுவத்தில் சக தோழரான ப்ரேம் குமாரை திருமணம் புரிந்தார் ஸெகால். இவர்களது திருமணம் 1947-ஆம் ஆண்டு லாகூரில் வைத்து நடைபெற்றது.
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஸெகால் கான்பூரில் உள்ள க்ளீனிக்கில் பணியாற்றும் வேளையில் சி.பி.எம் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. 1970-ஆம் ஆண்டு சி.பி.எம் கட்சி உறுப்பினர் ஆனார். மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
1998-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி தேசம் ஸெகாலை கவுரவித்தது. 2002-ஆம் ஆண்டு ஏ.பி.ஜெ.அப்துல் கலாமை எதிர்த்து குடியரசு தலைவர் தேர்தலில் இடதுசாரிகளின் வேட்பாளராக போட்டியிட்டார். பிரபல நடன கலைஞர் மிருணாளினி ஸாராபாய் ஸெகாலின் சகோதரி ஆவார். ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சராக இருந்த ஸெகால், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தவர்; இவருடைய மகள் சுபாஷினி அலி சி.பி.எம்.மின் மத்தியக் குழு உறுப்பினர் ஆவார்.
கேப்டன் லட்சுமி ஸெகாலின் சுய சரிதை நூல் “புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்” என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக