வியாழன், ஜூலை 26, 2012

இஸ்ரேல் கோரிக்கை நிராகரிப்பு:ஹிஸ்புல்லாஹ்வை கறுப்புப் பட்டியலில் சேர்க்கமாட்டோம் – ஐரோப்பிய யூனியன் !

ப்ரஸ்ஸல்ஸ்:லெபனான் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இஸ்ரேல் விடுத்த கோரிக்கையை ஐரோப்பிய யூனியன் நிராகரித்துவிட்டது.பல்கேரியாவில் கடந்த வாரம் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிஸ்புல்லாஹ்வை தீவிரவாத
இயக்கமாக அறிவித்து கறுப்புப் பட்டியலில் சேர்க்கவேண்டும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்டோர் லிபர்மான் ஐரோப்பிய யூனியன் தலைமையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், இவ்விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்த இயலவில்லை என்றும், ஆகையால் ஹிஸ்புல்லாஹ்வை கறுப்பு பட்டியலில் சேர்க்க முடியாது என்றும் சைப்ரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் எராடோமெர்குலிஸ் தெரிவித்துள்ளார்.
பல்கேரியாவில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் ஐந்து இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் ஈரானும், ஹிஸ்புல்லாஹ்வும் செயல்பட்டுள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
லெபனான் அரசியலில் தீவிரமாக பங்கேற்கும் அமைப்புதான் ஹிஸ்புல்லாஹ். ஆகவே இதனை கவனத்தில் கொண்டு மட்டுமே கறுப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்க முடியும் என மெர்குலிஸ் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத சம்பவங்களில் ஹிஸ்புல்லாஹ் ஈடுபட்டுள்ளதற்கு தெளிவான ஆதாரங்கள் இருந்தால் இஸ்ரேலின் கோரிக்கையை பரிசீலிக்கலாம் என ஐரோப்பிய யூனியனின் தலைவருமான சைப்ரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் மெர்குலிஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக