யங்கூன்:மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக அரசு ஆதரவுடன் தொடரும் இனப்படுகொலை குறித்து பேசாமல் மெளனம் சாதிக்கும் மியான்மர் எதிர்கட்சி தலைவரும் ஜனநாயக போராட்ட நாயகி என புகழப்பட்டவருமான ஆங் சான் சூகிக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என சூகி கோரிக்கை விடுத்தபோதிலும், ரோஹிங்கியா
முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைச் செய்யப்படுவதைக் குறித்து அவர் ஒரு வார்த்தைப் பேசவில்லை.
மனித உரிமை போராட்டங்களில் முந்தைய காலத்தில் முன்னணியில் இருந்த சூகியின் நிலைப்பாடு துக்கத்தை ஏற்படுத்துவதாக பிரபல மனித உரிமை ஆர்வலர் அன்னா ராபர்ட்ஸ் கூறுகிறார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழித்தொழிப்பை கண்டிக்க சூகிக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைத்த பிறகும் அவர் அதனை பயன்படுத்த தயாராகவில்லை என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் ஆசியா இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறுகிறார்.
ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகும் சூகி வேண்டுமென்றே ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்கள் குறித்து விமர்சிக்காமல் இருந்தார் என்று ஆடம்ஸ் கூறுகிறார்.
அதேவேளையில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால், 2015 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தனது கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என அஞ்சியே அவர் வாய் திறக்க மறுக்கிறார் என சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
எட்டு லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் குடிமக்களாக அங்கீகரிக்கமாட்டோம் என்றும் அவர்களை ஐ.நா அகதி முகாமில் தள்ளுவோம் எனவும் மியான்மரின் ராணுவ ஆட்சியாளர் தைன் ஸைன் அறிக்கை விடுத்திருந்தார். இதற்கு எதிராக சூகி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. 2 மாதத்திற்கும் மேலாக மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இனப்படுகொலையில் 700க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை காணவில்லை. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக