திங்கள், ஜூலை 30, 2012

கலவரம் இந்தியாவுக்கு களங்கம்:பிரதமர் மன்மோகன், துயர்துடைப்பு பணிகளுக்கு ரூ.300 கோடி !

PM Manmohan Singh says Assam violence a blot on the face of nation, announces Rs 300 crore reliefகுவஹாத்தி:அஸ்ஸாமில் வகுப்புவாத கலவரம் தேசத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதற்கு முடிவு கட்டவேண்டும் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். கொக்ராஜர் மாவட்டத்தில் போடோ இனவாத தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரங்கள் நிகழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில்
பேட்டி அளித்தார் பிரதமர் மன்மோகன். அப்பொழுது அவர் அஸ்ஸாம் துயர் துடைப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார். இதில் ரூ.100 கோடி துயர்துடைப்பு பணிகளுக்கும், மறுவாழ்வு திட்டங்களுக்கும் அவசர நிதியாக வழங்கப்படும் என்றார்.
அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியது: ‘இந்தச் சம்பவம் நாட்டிற்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். அதன் பின்னர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும். மோதலை யாராவது தூண்டியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எந்த சூழ்நிலையிலும் இனக் கலவரத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதற்கு முடிவு கட்ட வேண்டும்.
இப்பகுதி மக்களின் துயரம் மற்றும் வலியைப் பகிர்ந்து கொள்ளவும் ஆறுதல் கூறவும் நான் இங்கு வந்திருக்கிறேன். வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம், மறுவாழ்வு, வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு ரூ.300 கோடி வழங்கப்படும்.
இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கான நேரம் இதுவல்ல. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி திரும்பச் செய்வதே முக்கியப் பணியாக இருக்க வேண்டும்’ என்று பிரதமர் கூறினார்.
அஸ்ஸாம் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. கலவரத்தில் வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், ஓரளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை காலையில் குவாஹாத்தியில் இருந்து கொக்ரஜாருக்குப் புறப்பட்டார். அவர் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக 15 நிமிடங்களில் மீண்டும் குவாஹாத்திக்கே திரும்பியது. எனினும், இதற்கு வானிலை காரணமல்ல என்றும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாலேயே ஹெலிகாப்டர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.
பிரதமர் மதியம் 12.35 மணிக்கு கொக்ரஜாருக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அசாம் ஆளுநர் ஜே.பி.பட்நாயக், முதல்வர் தருண் கோகோய், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வர் காலிதா மற்றும் மாநில அரசின் உயரதிகாரிகள் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக