வியாழன், ஜூலை 19, 2012

கொடிகட்டிப் பறக்கும் சதை வியாபாரம்: எலும்பும், தோலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை !

 Skin Bones Tissue Sale இறந்த பின்னர் மனித உடலுக்கு மதிப்பில்லை எல்லாம் ஒரு பிடி சாம்பலில் முடிந்து விடும் என்று சித்தர்களும், ஞானிகளும் சொல்லி வந்தனர். இப்பொழுது அந்த வார்த்தையை அப்படியே மறந்து விட வேண்டியதுதான். மனித உடல் பல கோடி ரூபாய் பெறுமானமுடையதாக இருக்கிறது.இறந்த பின்னர் மனிதனின், தோலும், எலும்புகளும் களவாடப்படுகின்றனவாம். எலும்புகளையும், தோலினையும்
வைத்து உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவும், பற்களுக்கும் பயன்படுத்துகின்றனராம். அதற்கு அந்த நோயாளியின் அனுமதியை பெறுவதில்லை என்று அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர் ஐசிஐஜெ எனப்படும் (International Consortium of Investigative Journalists) சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள். இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் அபாய மணியை ஒலிக்கவிட்டிருக்கிறது
உலகம் முழுவதும் மனித உடல் உறுப்புக்களை திருடி கள்ளச்சந்தையில் விற்று பணம் பார்க்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. எட்டு மாதங்களாக 11 நாடுகளுக்கு பயணம் செய்த புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் மனித உறுப்புக்களை திருடும் கும்பலைப்பற்றியும், அதை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களைப் பற்றியும் எழுதியுள்ளனர்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதுபோன்ற இறந்த மனிதர்களின் தசை, எலும்புகளை புதிதாக பயன்படுத்துவதன் மூலம் ஆபத்து அதிகம் இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், ஹெச் ஐ வி மற்றும் உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் தோலும், எலும்பும் திருடப்பட்டு உயிரோடு இருப்பவர்களுக்கு பயன்படுத்தும் போது அதுவே ஆபத்தாகிவிடும் என்கின்றனர்.
இறந்துபோன மனித உடலில் இருந்து தசைகளையும், தோலினையும் எடுப்பது அவர்களின் உறவினர்களிடையே கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிவிடுகிறது. இதுபோன்ற மனித உறுப்புகளை திருடி விற்பனை செய்யும் கும்பல் பற்றி ஸ்கார்ட் கார்னி என்னும் எழுத்தாளர் ‘ரெட் மார்க்கெட்' என்னும் நூலில் ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது தி ரெட் மார்க்கெட். (The Red Market).
உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு.
ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி, பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது. ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகலத்தையும் போட்டு உடைக்கிறார்.
உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள்.
‘தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்' என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றனவாம். சுடுகாடுகளில், புதைக்கப்படும், எரிக்கப்படும் பிணங்களை திருடி பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள்.
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக் கண்டுகொள்வதில்லை. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.
"மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் எப்பொழுதும் மலிவானவை. இதுதான் காலனியச் சிந்தனை". அதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் தன் புத்தகத்தில் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார். இதற்காக நாடு நாடாக, பல ஊர்கள் சுற்றி உடல் உறுப்புகள் பற்றிய சந்தையைப் பற்றி தகவல்கள் திரட்டி நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் முன்வைக்கிறார் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி
உடல் விற்பனை என்பது, குழந்தைகள் கடத்தல், பெண்கள் விற்பனை, பெண்களின் கரு முட்டை விற்பனை, இரத்தம், கிட்னி, இதயம் உள்ளிட்ட இதர உடல் உறுப்புக்கள், இறந்தவர்களின் தோல், எலும்பு, வாடகைத் தாய் முதல் திருப்பதியில் இருந்து ஏற்றுமதி ஆகும் தலை முடி வரை அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் கோடி ரூபாய் பெறுமானமுள்ளவர்கள்தான். இனிமேல் யாரையாவது திட்டும்போது பைசா பெறாதவனே என்று திட்டாதீர்கள் புரிகிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக