வெள்ளி, ஜூலை 27, 2012

ஈரான் அணுசக்தி மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல்: பின்லாந்து தகவல் !

ஈரான் நாட்டின் அணுசக்தி மைய கம்ப்யூட்டர்கள் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக, பின்லாந்து நாட்டின் "சைபர்' பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 பின்லாந்தை மையமாகக் கொண்டு செயல்படும் "எஃப்- செக்யூர்' நிறுவன, ஆய்வுப் பிரிவுத் தலைவர் மிக்கோ ஹிப்பொனென் கூறியது:
 கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள்
எங்களுக்கு வருகிறது. அந்த மின்னஞ்சல்கள், ஈரான் அணுசக்தி மையத்தில் இருந்து அனுப்பப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளோம்.
 அணுசக்திக் கழகத்துக்காகப் பணிபுரியும் விஞ்ஞானி ஒருவர், தெஹரான் அணுசக்தி திட்டம் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது உண்மையா எனத் தெரியாது.
 ஆனால், புறக்கணிக்கத் தக்க ஒன்றல்ல. கணினி வலையமைவுகள்(நெட்வொர்க்) வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், "மெடாஸ்ப்ளாய்ட்" என்னும் மென்பொருள், தரவுகளைத் திருடுவதற்காகப் பயன்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 மின்னஞ்சல்களில் கூறியுள்ளபடி, யுரேனியம் செறிவூட்டலுக்கான நடான்ஸ், ஃபோர்டோ தளங்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. பணியிடத்தில் இடையிடையே இசை ஒலிக்கிறது. நள்ளிரவு நேரங்களில் அதிக சப்தத்துடன் இசை ஒலிக்கிறது. நேரடி மற்றும் மாற்று மின்சார மோதலால் இது நிகழ்ந்திருக்கும் என நான் கருதுகிறேன் என்று ஹிப்பொனென் தெரிவித்தார்.
 கடந்த 2010-ம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் பகுதி, "ஸ்டக்ஸ்நெட்' என்னும் சக்தி வாய்ந்த "மால்வேர்' -ஆல் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாகக் கூறியிருந்தன.
 மேற்கத்திய நாடுகளும், இஸ்ரேலும், ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டி வருகின்றன.
 ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்து வரும் ஈரான், அணுசக்தித் திட்டம், அமைதியான திட்டங்களுக்கே பயன்படுத்தப்படும் எனக்கூறி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக