துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடல் பகுதியில், இந்திய மீனவரை அமெரிக்கக் கடற்படையினர் சுட்டுக் கொன்றது கடும் கண்டனத்துக்குரிய ஒன்று. அன்னியப் படையினரால் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவதை இந்த செயல் தற்போது நிரூபிப்பதாக அமைந்துள்ளது என்று ஈரான்
கண்டனம் தெரிவித்துள்ளது.
துபாய் அருகே தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு மீது அமெரிக்கக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு இந்திய அரசு இதுவரை கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக என்ன நடந்தது என்பதை ஒரு அறிக்கையாக மட்டுமே வெளியிட்டுள்ளது. அதேசமயம், ஈரான் அரசு, இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளது, விமர்சித்துள்ளது.
அமெரிக்கர்களின் இச்செயல் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ள ஈரான், இச்சம்பவத்தின் மூலம் அன்னியப் படையினரால் பிராந்திய பாதுகாப்புக்கு ஊறு விளைந்திருப்பது நிரூபணமாகியுள்ளதாக கூறியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரமீன் மெஹமான்பராசத் கூறுகையில், நாங்கள் ஆரம்பத்திலிருந்தே இதுபோன்ற செயல்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக எச்சரித்து வந்துள்ளோம். இதுபோன்ற அன்னியப் படையினரால் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதை சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.
இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒருவருக்கொருவர் உதவி செய்து, அணுகுமுறையுடன் செயல்பட்டால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும். நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இணைந்து செயல்பட்டால், இதுபோன்ற அன்னியப் படையினரை இப்பகுதியில் நடமாடாமல் தடுக்க முடியும் என்றார்.
அமெரிக்கக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நடந்த பகுதி ஈரானுக்கு அருகில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக