காபூல்:ஐந்து பிரான்சு நாட்டு ராணுவ வீரர்களை ராணுவ கூட்டுப் பயிற்சியின் போது கொலைச் செய்த ஆப்கான் ராணுவ வீரர் அப்துல் ஸபூருக்கு ஆப்கான் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடுச் செய்ய அப்துல் ஸபூருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் ஆப்கானின் கபீஸா மாகாணத்தில் ஆப்கான் – பிரான்சு கூட்டு ராணுவ பயிற்சியின் போது ஆப்கான் வீரரான அப்துல் ஸபூர் 5 பிரான்சு நாட்டு வீரர்களை சுட்டுக் கொலைச் செய்தார். இச்சம்பவத்திற்கு பின்னர் தப்ப முயன்ற அப்துல் ஸபூரை சக ராணுவ வீரர் பிடித்துக் கொடுத்தார்.
வெளிநாட்டு ராணுவத்தினரை கொலைச்செய்த வழக்கில் முதன் முதலாக தண்டிக்கப்படும் நபர் அப்துல் ஸபூர் ஆவார்.
பிரான்சு உள்ளிட்ட நேட்டோ தோழமை நாடுகள் ஆப்கானில் இருந்து வெளியேற தருணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சக ஆப்கான் ராணுவ வீரர்களின் துப்பாக்கியால் சுடப்பட்டு நேட்டோ ராணுவத்தின் பலியாகும் சம்பவங்கள் ஆப்கானில் அதிகரித்து வருகின்றன. இவ்வாண்டு மட்டும் ஆப்கான் ராணுவத்தினர் சுட்டு 26 நேட்டோ ராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக