புதன், ஜூலை 18, 2012

ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...?

 What If Indian Navy Had Shot Us Fishermen சென்னை: இந்திய மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக ஒரு போன் கால் மூலம் வருத்தம் தெரிவித்து விட்டது அமெரிக்கா. இந்திய அரசும், ஒப்புக்கு லேசாக கூப்பாடு போட்டு விட்டு பிறகு கப்சிப்பாகி விடும், செத்துப் போன இந்திய மீனவரின் உயிர் 'கர்சிப்' போலாகி விடும். ஆனால் இதேபோல இந்திய கடற்படை அமெரிக்க மீ்னவர் ஒருவரை சுட்டுக் கொன்றால் அமெரிக்கா வாயில் விரலை வைத்துக்
கொண்டு அமைதி காக்குமா...?
பிழைப்புக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் போய் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த அப்பாவித் தமிழர்கள் அமெரிக்கக் கடற்படையிடம் சிக்கி குண்டடியைத் தாங்கியுள்ளனர். அதில் ஒருவர் பலியாகி விட்டார். மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எங்களை நோக்கி வேகமாக வந்தது படகு, இதனால் பலமுறை எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் அதை மதிக்காமல் படகு வந்ததால் சுட்டோம் என்று விளக்குகிறது அமெரிக்கா. அவர்கள் சொல்வது எல்லாம் சரி, அவர்கள் விடுத்த எச்சரிக்கை, இந்த மீனவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்புண்டா?... நிச்சயம் இருக்காது. காரணம், இவர்கள் ஆங்கிலம் தெரிந்திராத மீனவர்கள். மீன் பிடிக்க மட்டும்தான் இவர்களுக்குத் தெரியும், 'பல்லிடுக்கில் சிக்கிய பல்லி' கத்துவதைப் போல, அமெரிக்கர்கள் பேசும் முரட்டு ஆங்கிலம் இவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்காது.
சரி, வருவது தாக்குதல் நடத்தும் படகா அல்லது மீன்பிடி படகா என்று கூடவா அமெரிக்கக் கடற்படையினரால் அனுமானிக்க முடியவில்லை?. அந்த அளவுக்கா அவர்கள் பய பீதியில் மூழ்கிப் போயுள்ளனர்?. கையில்தான் நிறைய நவீன தொலைநோக்கிகளை வைத்திருப்பார்களே, அதை வைத்து சரியாக ஜூம் செய்து பார்த்திருந்தால் கூட வருவது மீன்பிடி படகு என்று தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமலா போய் விடும்?.
தங்களை நோக்கி யாராவது வந்தாலே, கொல்லத்தான் வருகிறார்கள் என்று எப்படி இவர்களாகவே முடிவெடுக்க முடியும்?, அப்படியே வந்தாலும் கூட அவர்களை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்த முயற்சித்திருக்கலாமே, சுடாமலேயே இவர்களைப் பிடித்து விசாரித்திருக்கலாமே.. இப்படி எதையுமே இந்த அமெரிக்க வீரர்கள் முயற்சிக்கவில்லையே...!
இப்படி கண்டதும் சுடும் உரிமையும், கடமையும் இவர்களுக்கு மட்டும்தானா இருக்கிறது?.. ஒரு வேளை அமெரிக்கர் ஒருவரை இதேபோல நமது படையினர் சுட்டுத் தூக்கியிருந்தால் அமெரிக்கா அமைதியாக இருந்திருக்குமா?..
வெளியுறவுத்துறைத் செயலாளரை விட்டு ஒரு போன் செய்து பேசி 'ஸாரி'ங்க என்று இந்திய அரசு சொல்லியிருந்தால் அதை அமெரிக்கா அமைதியாக ஏற்றுக் கொண்டிருக்குமா? .. இறந்தவருக்காக வருத்தப்படுகிறோம், என்ன செய்வது நடந்தது நடந்து விட்டது என்று ஆறுதலாக நாலு வார்த்தை கூறியிருந்தால் அதையும் அமெரிக்கா அமைதியாகவா கேட்டுக் கொண்டிருக்கும்...?
அமெரிக்காவைப் பொறுத்தவரை அது 'எப்போதுமே' தவறு செய்யாது... ஆனால் மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு மட்டுமே.. இந்த மனோபாவம்தான் பொசுக்கென துப்பாக்கியைத் தூக்கும் தைரியத்தை அந்த நாட்டுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதுவும் கூட ஒரு வகையில் தீவிரவாதம்தான்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக