புதன், ஜூலை 18, 2012

தென்அமெரிக்க மூலையில் 46 ஆண்டாக யாருமில்லாத ஊரில் தனியே வசிக்கும் தாத்தா !

தென்அமெரிக்காவில் ஆட்களே இல்லாத ஊரில் தன்னந்தனியாக ஒரு தாத்தா 46 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்தியாவுக்கு குமரிமுனை போல, தென்அமெரிக்காவின் தென்கோடியில் இருக்கும் பகுதி ‘பேடகோனியா’. அர்ஜென்டினா, சிலி
நாடுகளின் எல்லை பகுதி. இங்குள்ள லேக் ஓ ஹிக்கின்ஸ் என்ற இடத்தில் ஆள் அரவம் இல்லாத காட்டுக்குள் 81 வயது தாத்தா கடந்த 46 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இவரது பெயர் பாஸ்டினோ பரியன்டோஸ். அர்ஜென்டினாவை சேர்ந்தவர். முன்பு மாடு மேய்த்து வந்த இவர் தற்போது ஆடுகளை வைத்து பராமரித்து வருகிறார். 
 எனக்கு 11 குழந்தைகள். எல்லாரும் திருமணமாகி அவரவர் வழியில் போய்விட்டனர். இளம் வயதில் கட்டுமான வேலை பார்த்து வந்தேன். ஒரே இடத்தில் தங்குவது எனக்கு பிடிக்காது. இடம் விட்டு இடம் சென்றுகொண்டே இருப்பேன். நாட்டின் பல பகுதிகளிலும் வேலை பார்த்திருக்கிறேன். எதேச்சையாக ஒருமுறை பேடகோனியாவுக்கு வந்தேன். ஆள் அரவம் இல்லாமல், மிகவும் அமைதியாக இருந்த இப்பகுதி எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இங்கேயே தங்கினேன். கடந்த 46 ஆண்டுகளாக இந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஆடுகளை மேய்ப்பதில் பொழுது போவதே தெரியாது. எப்போதோ ஒருமுறை டிவி பார்த்ததாக ஞாபகம். ரேடியோ மூலம் உலக நடப்புகளை தெரிந்துகொள்கிறேன். ஆடுகளும் ரேடியோவும்தான் என் உலகம்.

ஆறு, மலைகளை கடந்து 25 கி.மீ. பயணித்தால் வில்லா ஓ ஹிக்கின்ஸ் என்ற கிராமம் வரும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என் ஆடுகளை அங்கு ஓட்டிச் சென்று சந்தையில் விற்று வருவேன். போய் வருவதற்கு 2 நாட்கள் ஆகும். வெகு தொலைவில் இருப்பதால், பேப்பர் போடுபவர்கள்கூட இங்கு வரமாட்டார்கள். 6 மாதத்துக்கு ஒருமுறை வந்து, இருக்கிற பேப்பர்களை எல்லாம் போட்டுவிட்டு போவார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை படிப்பேன்.
அருகருகே 2 குடில்கள் கட்டி வைத்துள்ளேன். சாப்பிட, தூங்க, ரேடியோ கேட்க ஒரு வீடு. மாவு, சர்க்கரை மூட்டைகள், சூப் பாக்கெட் உள்பட மளிகை பொருட்களை ஒரு வீட்டில் வைத்துள்ளேன். முன்பெல்லாம் இந்த இடம் இருப்பது யாருக்கும் தெரியாது. இப்போது, படகுகளில் கடந்து செல்பவர்கள் இங்கு இறங்கி செல்கின்றனர். வருபவர்கள் காசு, பணம் கொடுப்பார்கள். வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிடுவேன். உண்மையிலேயே, எனக்கு பணம் தேவையில்லை. படகில் வருபவர்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை உணவு பொருட்கள், சர்க்கரை, மாவு, சூப் டின்கள் இப்படி எனக்கு தேவையான பொருட்களை கொடுத்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இறுதி காலம் வரை இங்குதான் இருக்கப் போகிறேன். தனிமையை அனுபவித்து பாருங்கள். அது மிகவும் மகிழ்ச்சியானது, சுவாரஸ்யமானது. இவ்வாறு பாஸ்டினோ கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக