புதன், ஜூலை 18, 2012

தமிழக மீனவர் படுகொலை- அமெரிக்க கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்ய இந்தியா வலியுறுத்தல்

 Fisherman Killing India Asks Uae Register Case துபாய்: தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சம்பவம் என்ன?
துபாய் கடற்பரப்பில் அந்நாட்டு நிறுவனம் ஒன்றுக்காக ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டிருந்த
தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பஹ்ரைனில் முகாமிட்டுள்ள அமெரிக்க கடற்படையினர் 5-வது படை பிரிவுக்காக எரிபொருள் ஏற்றிக் கொண்டு யுஎஸ்என்எஸ் ரப்பாஹன்னோக் என்ற கப்பல் துபாயின் ஜபேல் அலி முறைமுகம் அருகே சென்று கொண்டிருந்தது.
தமிழக மீனவர்களின் மீன்பிடி படகு, அமெரிக்க கப்பலின் அருகே சென்றபோது அக்கப்பலில் இருந்த கடற்படையினர் கண்மூடித்தனமாக இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் தமிழக மீனவர் சேகர் உயிரிழந்தார். முனிராஜ், முத்துக்கண்ணன், முருகன் ஆகிய மூன்று மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தல்
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் மூன்று தமிழக மீனவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ஐக்கிய அரபு எமிரேட் அரசிடம் இந்திய தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கேரளாவின் கொல்லம் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இத்தாலிய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இத்தாலிய கடற்படையினர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இச்சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு அமெரிக்க கடற்படையினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய இந்திய தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியிருக்கின்றனர்.
அறிக்கை தர உத்தரவு
இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தருமாறு துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக துபாயில் உள்ள தூதரை தொடர்பு கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, பலியான மீனவர் சேகரின் உடலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவும் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்க கடற்படையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை தூதரகம் இரங்கல்
இதனிடையே சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாயில் அமெரிக்கக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் சேகர் பலியானதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக