கொழும்பு: விமர்சகர்களையும், அதிருப்தியாளர்களையும் இலங்கை அரசு ஒடுக்கி வருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் குற்றம் சாட்டியுள்ளது.
ஆம்னஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,’இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக கருத்து சொன்ன காரணத்துக்காக ஊடகவியலாளர்கள், தொழிற்சங்க ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், சட்ட நிபுணர்கள் போன்றோர் தாக்கப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும், சிலவேளை கொல்லப்பட்டும் இருக்கின்றனர்’ என்று கூறியுள்ளது.
மேலும்,’இலங்கையில் மனித உரிமை நிலவரம் மேம்படாத வரையில் காமன்வெல்த் அமைப்பு நாடுகளுடைய உச்சி மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதை அவ்வமைப்பு தவிர்க்க வேண்டும்’ என ஆம்னஸ்டி வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அதிகாரிகளிடம் ஆம்னஸ்டியின் கோரிக்கைகள்: மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், அமைதிகரமாக ஒன்றுகூடுவதற்குள்ள சுதந்திரம், சங்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்குள்ள உரிமை போன்றவற்றை இலங்கை அரசு மதிக்கவும், பாதுகாக்கவும், பூர்த்தி செய்யவும் வேண்டும்.
ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்திய ஏனையோர் அச்சுறுத்தப்பட்டது, தடுத்துவைக்கப்பட்டது, துன்புறுத்தப்பட்டது, கொல்லப்பட்டது உட்பட்ட தாக்குதல்கள் இலங்கையில் நடந்துள்ளன என்பதை அரசாங்கம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஒருவர் கொண்டுள்ள அபிப்பிராயம் அல்லது வெளியிடும் அபிப்பிராயம் எதுவாக இருந்தாலும் சரி அவருக்கு எதிராக தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் துன்புறுத்தலும் நடப்பதை இனி கொஞ்சமும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என்று இலங்கை அரசு தெளிவாக பிரகடனம் செய்ய வேண்டும்.
குற்றச் சந்தேகநபர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி, அந்தஸ்தில் இருந்தாலும் சரி, அவருடைய அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும் சரி, அவ்வகையான செயல் கொஞ்சமும் சகித்துக்கொள்ளப்படாது என்பதை இலங்கை அரசு பிரகடனம் செய்ய வேண்டும்.
குற்றச்சந்தேக நபர் யாராக இருந்தாலும் சரி, பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் சரி எல்லா குற்றங்களுமே தாமதமின்றியும், சுயாதீனமாகவும், பக்கச்சார்பின்றியும், பலனேற்படும் விதத்திலும் விசாரிக்கப்படுவதை இலங்கை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
உரிமை மீறல்களைச் செய்த சந்தேக நபர்கள், அவர்கள் அச்செயலுக்கு உத்தரவிடும் பொறுப்பிலிருந்த அதிகாரிகள் என்றாலும், சம்பவம் நடந்ததை அறிந்திருந்தவர்கள் என்றாலும், அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருந்தவர்கள் என்றாலும், உரிமை மீறல் நடக்கப்போகிறது என்று அறிந்தும் அதனைத் தடுக்கவோ, நடந்துவிட்டிருந்தால் அதைச் செய்தவர்களை தண்டிக்கவும் தவறிய கட்டளை அதிகாரிகள் என்றாலும் அவர்களுக்கும் எதிராக சர்வதேச தரத்திலான நியாயமான வழக்கு விசாரணைகளுடன் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதை இலங்கை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக