சனி, ஜனவரி 05, 2013

பீடி, சிகரெட் விளம்பரத்துக்கு தடை !

புதுடெல்லி: பொதுவாக கடைகளில் விற்கப்படும் பீடி, சிகெரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு அமைக்கப்படும் விளம்பர பலகைகள் இரண்டுக்கு ஒன்றரை அடி என்ற அளவுக்கு மேல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக அமலாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விளம்பரப் பலகைகள் அமைப்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பீடி, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் விதி-2004ஐ விளம்பரங்களைத் தடை செய்தல் மற்றும் வர்த்தகம்- தொழில், உற்பத்தி,
அளிப்பு, விநியோகத்தை ஒழுங்குமுறைக்கு உட்படுத்துதல் போன்றவற்றை அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இனி புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே இருக்க வேண்டும். அதிலும், இந்திய மொழிகளில், "புகையிலைப் பயன்பாடு புற்றுநோயை ஏற்படுத்தும்', என்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவது கட்டாயம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

புகையிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக