திங்கள், ஜனவரி 07, 2013

வண்டு விழுங்கும் வைத்தியத்திற்காக பெரு நாட்டிற்கு படையெடுக்கும் கேரள புற்றுநோயாளிகள் !

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தில் இருந்து தப்பவே முடியாது எனற நிலைமைமாறி நவீன மருத்துவ முறைகளின் மூலம் தற்போது நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், தென்அமெரிக்காவில் உள்ள 'பெரு' நாட்டில், பழங்கால சிகிச்சையின் மூலம், புற்றுநோயாளிகளுக்கு பூரண சுகம் கிடைப்பதாக உலகெங்கும் பரவிவரும் நம்பிக்கை, கேரள மக்களையும் பற்றியுள்ளது.  பெருநாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள இயற்கைமுறை வைத்தியசாலையில், புற்றுநோயாளிகளுக்கு நூதனமான சிகிச்சை வழங்கப்படுகின்றது.  கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்புனி ரமேஷ் என்பவர், பெருநாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் வேலை செய்து வந்தார். 

நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர்,பெரு தலைநகர் லிமாவில் உள்ள டி-மகதலேனா மாவட்டத்தில் இயங்கி வரும் இயற்கைமுறை வைத்திய சாலையில் இதற்காக சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

சிகிச்சை என்ன தெரியுமா...? 

பெரு நாட்டில் கிடைக்கும் ஒருவகை விஷவண்டுகளை புற்று நோயாளிகள் தினந்தோறும் விழுங்கவேண்டும். இந்த வண்டு நோயாளியின் குடலுக்குள் இறந்துப் போகும். இறக்கும் தருவாயில், இந்த வண்டின் உடலில் இருநது வெளிப்படும் ஹார்மோன், புற்று நோய்க்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சையான 'கீமொ தெராபி'க்கு நிகரானது என்று பெருநாட்டு மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை, அப்புனி ரமேஷ் மூலம் கேரள மக்களையும் தொற்றிக்கொண்டுள்ளது. 

சிகிச்சைக்காக பெரு நாட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கேரள மக்கள் பலர், இந்தியாவில் உள்ள பெருதூதரகத்தில் விசா வேண்டி மனு செய்துள்ளனர். இதனையடுத்து, தூதரக அதிகாரி ஹமீத் ஹுசேன் என்பவரை கேரளாவுக்கு அனுப்பி, நிலைமையை அறிந்த தூதரக உயரதிகாரிகள், சிலருக்கு விசா வழங்கி உள்ளனர். 

அடுத்த வாரத்தில் 3 பேர் பெரு நாட்டிற்கு சென்று இந்த சிகிச்சையை மேற்கொள்ள உள்ளனர். இவர்களை தொடர்ந்து சுமார் 200 நோயாளிகள் பெரு நாட்டிற்கு பறக்க உள்ளனர். 

சுமார் 17 ஆயிரம் கி. மீட்டர் காரம் உள்ள பெருநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று திரும்புவதற்கு குறைந்தபட்சம் ரூ. 3 லட்சம் செலவாகும் என்றாலும், இன்னும் சில காலம் உயிர்வாழ முடியும் என்ற நம்பிக்கைக்கு முன்னால் பணம் ஒரு பொருட்டே அல்ல என சில நோயாளிகள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக