ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு அதிகமாகச் சம்பாதிக்கும் திரைப்படக் கலைஞர்களுக்கு 12.36% சேவைவரி விதிக்கப்படும்" என்ற அரசின் அறிவிப்பு, கடந்த ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்தது. வருமான வரியையே ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் இழுத்தடிப்பவர்கள் இருக்கும் நிலையில், இந்தச் சேவை வரிவிதிப்பை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதனைத் தொடர்ந்து, சேவை வரி கட்டாதவர்களுக்கு நீதிமன்ற அறிவிக்கை அனுப்பப்படும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியானது. அலறியடித்துக்கொண்டு, இந்த அறிவிப்புக்கும் சேவை வரி விதிப்புக்கும் எதிராக, திரைத்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஜனநாயக நாட்டில் தமது கோரிக்கையை வலியுறுத்துவதற்காக யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கலாம். தயாரிப்பாளார்கள் செலவில் நட்சத்திர ஓட்டல் சாப்பாட்டை உண்டுவரும் நடிகர்-நடிகையர்கள், மாதம் ஒரு நாளாவது உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கும் நல்லதுதான். இந்த உண்ணாவிரதத்தில் இரண்டு மணிநேரம் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தாம் பேசும்போது, "மத்திய அரசின் இந்தச் சேவை வரிவிதிப்பு, கருப்புப்பணத்தை ஊக்குவிக்கும்" என்று கூறினார். கருப்பு பணம் என்பது கணக்கில் காட்டப்படாத/வரிசெலுத்தப்படாத பணம் என்பது ரஜினிக்கு நன்றாகத் தெரிந்திருப்பதால்தான் அவ்வாறு பேசியிருக்க வேண்டும்.
கோடிக்கணக்கில் ஊதியம் வாங்கும் நடிகர்கள் வெள்ளையாக 25% மும் கருப்பாக 75% சம்பளம் வாங்குவதே ஆண்டாண்டு காலமாகக் கடைபிடித்து வரும் திரையுலக நடைமுறை. சாம்பார் நடிகர்கள்கூட இப்போதெல்லாம் ஒரு படத்திற்குக் குறைந்தது 30 - 50 லகரங்களில் சம்பளம் வாங்குகிறார்கள். பஞ்ச் டயலாக் நடிகர்களுக்கு குறைந்தது 1C (ஒருகோடி ரூபாயை செல்லமாக இப்படித்தான் சொல்வார்கள்!). இதுவே, முதல் விநியோக உரிமையைப் பொறுத்து 50C-100C வரையும் தேறும். விஸ்வரூபம் படம் வெளியாகும் முன்பே 300C ஐ தாண்டிவிட்டதாக உணர்ச்சி வயப்பட்ட ஒரு ரசிகரால் கதைகட்டி விடப்பட்டதும் தனிக்கதை!
திரைப்படத்தில் தேசப்பற்று குறித்தும் ஊழல், லஞ்சம் இவற்றுக்கு எதிராகவும் கழுத்து நரம்பு புடைக்க வசனம் பேசும் திரையுலகினரின் மற்றொரு முகம், இந்தச் சேவை வரிக்கு எதிரான உண்ணாவிரதத்தில் தெரியவந்துள்ளதோடு, திரைப்படத்தில் நடிப்பதைக் "கலைச்சேவை" என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் இவர்கள், பொதுமக்களிடமிருந்து பொழுதுபோக்குக்காக கறக்கும் பணத்துக்குச் "சேவை" வரி செலுத்த மறுப்பது முரண்பாடாக உள்ளது. இரட்டைவேடம் திரைப்படங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்தான் போடுகிறோம் என்று கூறாமல் கூறுகிறார்களோ?
சரி அது இருக்கட்டும்!
"மத்திய அரசின் இந்தச் சேவை வரி விதிப்பு கருப்புப்பணத்தை ஊக்குவிக்கும்" என்று கூறிய ரஜினி சார், இதன்மூலம் என்னதான் கூறவருகிறார் என்பது புரிகிறதா?. இந்தச் சேவை வரி, "திரைப்பட நடிகர்-நடிகைகள் தற்போது தாம் வெள்ளையாக வாங்கும் ஊதியத்தைக்கூட இனிமேல் கறுப்பாக வாங்குவதற்கே வழிவகுக்கும்" என்று திரைப்படத்துறையினரைக் காட்டிக்கொடுத்தது போலல்லவா உள்ளது அவரின் பேச்சு? அய்யோ பாவம், அவரே அறியாமல் உண்மையை இப்படிப்போட்டு உடைத்துவிட்டார்!
"மத்திய அரசின் இந்தச் சேவை வரி விதிப்பு கருப்புப்பணத்தை ஊக்குவிக்கும்" என்று கூறிய ரஜினி சார், இதன்மூலம் என்னதான் கூறவருகிறார் என்பது புரிகிறதா?. இந்தச் சேவை வரி, "திரைப்பட நடிகர்-நடிகைகள் தற்போது தாம் வெள்ளையாக வாங்கும் ஊதியத்தைக்கூட இனிமேல் கறுப்பாக வாங்குவதற்கே வழிவகுக்கும்" என்று திரைப்படத்துறையினரைக் காட்டிக்கொடுத்தது போலல்லவா உள்ளது அவரின் பேச்சு? அய்யோ பாவம், அவரே அறியாமல் உண்மையை இப்படிப்போட்டு உடைத்துவிட்டார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக