குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி நியமனத்தை எதிர்த்து அம்மாநில அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குஜராத் மாநில லோக் ஆயுக்தா நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ஏ.மேத்தா நியமிக்கப்பட்டார். ஆளுநர் கமலா பெனிவால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரை நியமித்தார்.இதற்கு குஜராத் அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தங்களை கலந்து ஆலோசிக்காமல் கவர்னர் கமலா பெனிவால் குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதியை நியமனம் செய்ததாகவும்,அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி குஜராத் அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ஆனால் ஆளுநரின் முடிவு சரியானதுதான் என்று கூறி உயர் நீதிமன்றம், இந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு,குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.
ஆளுநர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டியவர்.எனினும், லோக் ஆயுக்தா நீதிபதியாக மேத்தாவை நியமனம் செய்த விவகாரத்தில் மாநில தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து கவர்னர் செயல்பட்டுள்ளார்.எனவே, அவரது நியமனம் செய்யத்தக்கதுதான்.லோக் ஆயுக்தா நீதிபதியாக மேத்தா தொடர்ந்து செயல்படலாம் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று செயல்படுத்த உள்ளதாக நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக