ஞாயிறு, ஜனவரி 13, 2013

ரிஸானா விஷயத்தில் நடந்தது என்ன? குற்றமும்! பின்னணியும் !

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின், மூதூர் பகுதி கிராமமொன்றில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ரிஸானாவுக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த செய்தியை வைத்து நாத்திகர்கள் முதல் ஹிந்து பாசிஸ்ட்கள் வரை இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கிறார்கள்இஸ்லாத்தை வம்புக்கு இழுக்க காரணம் என்ன?: கொலைக்கு கொலை, திருட்டுக்கு கை வெட்டு என்று இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் ஒரு அங்கமான, குற்றவியல் சட்டம் சொல்கிறது. இந்த இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின்  அடிப்படையில் அந்த பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டது.  இதுவே இவர்களின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதுஇது நிஜ கண்ணீரா நீலி கண்ணீரா?: கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஜாதி கொடுமை, மத கலவரம் மற்றும்  ஆட்சியாளர்கள், ரவுடிகள், அரசியல்வாதிகள், போலீஸ், ராணுவம் மற்றும் அதிகாரவர்க்கத்தால்  அப்பாவி மக்களின் உயிர் தினம், தினம் கொத்து கொத்தாக பறிக்கப்படுகின்றது. இதுகுறித்தெல்லாம் இவர்கள் இந்த அளவுக்கு அதிர்ச்சி அடைந்ததோ, பெரும் கவலைப்பட்டதோ இல்லை. 
 
காஸ்மீரில் இந்திய ராணுவம் அப்பாவி மக்களை கொல்லும், பெண்களை கற்பழிக்கும், சிறுவர்களை தீவிரவாதிகள் என்று சுட்டு கொல்லும் அதை பற்றி நமக்கு கவலை இல்லை, குஜராத்தில் ஹிந்துத்துவா முஸ்லிம் பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழிக்கும், அதை வீடியோ எடுக்கும், நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்ரை கிழித்து குழந்தையை தீயில் இட்டு பொசுக்கும் இதை பற்றி எல்லாம் நமக்கு கவலை இல்லை, கண்ணீர் விட நேரமும் இல்லை. 
 
இவர்களது புலம்பலில் நியாயம் இருக்கிறதா?:  ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டு குற்றம் செய்ததாக போலீஸ், மருத்துவ, தடவியல் துறை இவற்றின் அறிக்கைகள் அடிப்படையில் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒரு விசயத்திற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம். இந்த தண்டனை இஸ்லாமிய ஷரியத் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதே இந்த புலம்பல்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 
 
மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் அடிக்கடி திருத்தப்படுவதும் அதில் உள்ள ஓட்டைகளை வைத்து குற்றவாளிகள் தப்பித்து கொள்வதும் வழக்கமான ஒன்றாகி போய் விட்டது. இதனால் அதிகாரம் படைத்தவர்கள் கொலை, கற்பழிப்பு என்று எதை செய்தாலும் தப்பித்து கொள்ளலாம் என்கிற நிலை உலக அளவில் பல நாடுகளில் நிலவி வருகிறது, அதுவும் குறிப்பாக இந்தியாவில் எந்த அளவுக்கு நடக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
 
இஸ்லாமிய குற்றவியல் சட்டம் என்பது மனிதனை படைத்த இறைவனால் அவனது தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் வழியாக அருளப்பட்டது. திருடினால் கை வெட்டு என்பது இஸ்லாமிய குற்றவியல் சட்டம். இதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் பொழுது என் மகள் பாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று  சொன்னார்கள். பாத்திமா தனது பாசத்துக்கு உரிய மகள் என்பதால் இரக்கம் காட்ட முடியாது என்பதை நபிகளார் உறுதியோடு தெளிவுபடுத்தினார்கள்.
 
ஷரியத் சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல இச்சட்டத்தை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றினால் அங்கே கற்பழிப்பு, கொலை. கொள்ளை  போன்ற குற்றங்கள் குறையும் மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியும். இச்சட்டம் மனிதர்கள் பாதுகாப்பாக வாழ வல்லமை பொருந்திய இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சட்டம் முஸ்லிம்களின் தனி சொத்து அல்ல, இதை யார் வேண்டுமானாலும் நடைமுறைபடுத்தலாம் என்பதே உண்மை
 
கடுமையான சட்டங்கள் இருந்தும் குற்றம் குறையாதது ஏன்?: மத நம்பிக்கை இல்லாத அல்லது மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் கூட டெல்லி மாணவி கற்பழிப்பு முதல் பல்வேறு கொடூரமான சம்பவங்கள் நடக்கும் பொழுது சம்மந்தப்பட்டவர்களை தண்டிக்க சவுதி அரேபியா (ஷரியத் சட்டம்) போல் சட்டம் வேண்டும் என்று நடந்த கொடுமைகளை தாங்கி கொள்ள முடியாமல் தங்களை அறியாமல் அறிக்கைகளை விடுவதை பார்க்க முடிகிறது. அமெரிககா போன்ற மேலை நாடுகளில் குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க முடியாது என்கிற சூழல் இருந்த பொழுதிலும் அங்கும் குற்றங்கள் குறையவில்லை. 
 
சட்டங்கள் நேர்மையாக, அதே நேரம் கடுமையாக கடைபிடிக்கப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளில் குற்றங்கள் அதிகமாக நடக்கும் பொழுது சவூதி அரேபியா போன்ற நாடுகளில் குற்றங்கள் குறைவாக நடப்பது ஏன்? (இதனால் சவூதி அரேபியர்கள் எல்லாம் யோக்கியர்கள் என்று எண்ணி விடவேண்டாம்). இதற்க்கு காரணம் அமெரிக்காவில் மரண தண்டனை கிடையாது, கொலை குற்றமே செய்தாலும் ஆயுள்தண்டனைதான். இதனால் குற்றவாளிகள் உயிரோடு சிறையில் வாழ்வதையும் அவர்களை அவர்களது நண்பர்கள், உறவினர்கள் சென்று பார்த்து வருவதையும் பார்க்கும் மக்களுக்கு தண்டனை குறித்த பயமில்லாமல் போனது. 
 
அதிலும் குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் சட்டத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் நிலவும் ஓட்டையை பயன்படுத்தி இலகுவாக வெளிவந்து விடலாம் என்கிற தைரியத்தில் தினமும் கற்பழிப்புகளும், கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறி வருகின்றன. இஸ்லாமிய கலிபா உமர் ரலி அவர்களின் ஆட்சிபோல் ஒரு ஆட்சி வேண்டும் என்று தேசப்பிதா காந்திஜி அவர்களே எழுதும் அளவிற்கு இஸ்லாமிய ஆட்சியின் குற்றவியல்  சட்டங்கள் அமைந்திருந்தன. கொலை, கற்பழிப்பு போன்ற குற்றம் செய்தவர்களை பொது இடத்தில வைத்து தலை வெட்டினால் இது போன்ற குற்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபட பயப்படுவார்கள் என்பதே உண்மை.
 
இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நாமும் நடை முறைபடுத்தலாமே: இஸ்லாத்தில் "அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு" என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆகவே கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்களோ, யூத, கிறிஸ்தவர்களோ, ஹிந்துக்களோ இஸ்லாத்தின் எல்லா சட்டங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்றுகொள்ள தேவையில்லை. குறைந்த பட்சம் மக்கள் நிம்மதியாக வாழ இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்களையாவது ஏற்றுக்கொள்ளலாமே, அதை நடை முறைபடுத்தலாமே. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை முஸ்லிம்கள் தங்களுக்கு மட்டுமே உரியது, இதை யாரும் பின்பற்ற கூடாது என்று உரிமை கொண்டாட வில்லையே. அப்படி இருக்க அதை பின்பற்றுவதில் என்ன ஈகோ இருக்கிறது? என்பதே நமது பொதுவான கேள்வியும், இது போன்று சந்தர்பங்களில் புலம்பும் தமிழச்சி போன்றவர்களுக்குமான பதிலும் கூட.
 
அனுதாபம் என்பது 17 வயது பெண்ணுக்கும் 4 மாத குழந்தைக்கும் ஒன்றுதான்: ரிஸானா விசயத்தில் என்ன நடந்தது என்பது முழுவதுமாக அறிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் ரிஸானா ஏதோ ஒரு கோபத்திலோ, அதிக வேலை மற்றும் முதலாளி குடும்பத்தின் மீது கொண்ட வெறுப்பினாலோ அந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றிருந்தால் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. நாம் 17 வயது ஒரு குழந்தை பெண்ணுக்கு அளிக்கப்பட தண்டனையை குறித்து மனம் வருந்துகிறோம் அதே நேரம் வாய் பேச தெரியாத 4 மாத குழந்தை என்ன பாவம் செய்தது, அதுவும் உயிர்தானே அதுவும் இந்த உலகில் தவழ்ந்து நடை பழகி, மழலை மொழியில் பேசி, பார்க்கும் எல்லோரையும் மகிழ வைக்கும் ஒரு பூதானே அதை குறித்து ஏன் இவர்களுக்கு கவலை கொள்ள தோணவில்லை. 
 
சவூதி அரேபியா இஸ்லாமிய ஷரியத்தை முழுமையாக பின்பற்றுகிறதா?: சவூதி அரேபியா ஒன்றும் இஸ்லாமிய ஷரியத் அடிப்படையில் முழுமையாக ஆட்சி நடத்தும் ஒரு நாடு இல்லை. இஸ்லாத்தில் குடும்ப அரசியலுக்கும், மன்னராட்சிக்கும் இடமே இல்லை. ஆனால் இப்பொழுது அதுதான் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. முதலில் உலகிற்கு ஜனநாயகத்தை கற்று கொடுத்தது இஸ்லாம்தான். ஆனால் அந்த ஜனநாயகம் சவூதி அரேபியாவில் இல்லை என்பது வேறு விஷயம். அதனால் சவூதி அரேபியா செய்யும் காரியங்களை யாரும் இஸ்லாத்தின் அடிப்படையில் கணக்கிட வேண்டாம். அவர்கள் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தை தங்களது நாட்டில் நடை முறைபடுத்துகிறார்கள் அவ்வளவே.
 
இதில் முக்கிய குற்றவாளி யார்?: இந்த விசயத்தில் சவூதி அரேபிய அரசாங்கத்தை நாம் குற்றம் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இஸ்லாத்தில் எந்த ஒரு தண்டனை கொடுப்பதற்கு முன்னாலும் அதற்குரிய சூழல் அங்கே உருவாக்கப்பட வேண்டும் என்பதும் சட்டங்கள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்பதும் பொதுவான இஸ்லாமிய நீதிகுறிப்பாக திருடினால் கை வெட்டு என்கிற சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் முற்றிலும் வறுமை மற்றும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்திருக்கப்பட வேண்டும்அதாவது உணவில்லை, குழந்தைக்கு, குடும்பத்தாருக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவம் செய்ய, போன்ற எந்த காரணத்திற்காகவும்  ஒருவன் திருட்டில் ஈடுபட கூடாது. திருட்டு நடப்பதற்கான அடிப்படை காரணங்களின் வாசல்கள் அனைத்தும் ஆட்சியாளர்களால் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். 
 
ரிஸானா தரப்பு நியாயங்கள்: அதே நேரம் ரிஸானா இந்த குற்றத்தை செய்யாமல் அவளை செய்ததாக சொல்லியிருந்தால் அது முற்றிலும் தவறான ஒன்று என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. சவூதி அரேபிய போலீஸ் மற்றும் தடவியல் துறை, மருத்துவ துரையின் அறிக்கை  ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனஅப்படியே ரிஸானாவின் குற்றம் உண்மையானதாக இருந்தாலும் ரிஸானா தரப்பிலேயே நியாயங்கள் இருகின்றன. அதாவது கொலைக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்பதை ரிஸானா அறிந்த நிலையில் வளர்க்கப்பட்டவள் இல்லை. அதாவாது சவூதி அரேபியாவில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு அந்த சட்டங்கள் சிறிய வயது முதல் சொல்லி கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவார்கள். 
 
ஆனால் ரிஸானா போன்று வெளிநாடுகளில் வேலைக்கு போகும் அனைவருக்கும் சட்டங்களின் கடுமை கேள்விபட்டோ அல்லது கேள்விபடாமல் கூட இருக்கலாம்அது தவிர ரிஸானா போன்ற சிறு பெண்களுக்கு குற்றவியல் சட்டங்களின் முழு தாத்பரியமும் விளங்கி இருக்க நியாயம் இல்லை. சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு வந்த பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் இது போன்ற தண்டனைகளில் மாட்டி கொண்ட பல சம்பவங்கள் இதுவரை நடந்தேறி விட்டது.  இவர்களுக்கு ஆதரவாக அவர்கள் சார்ந்திருக்கும் நாடும் கடமைக்கு கவலை கொள்வதும், இதை சாக்காக வைத்து இஸ்லாத்தின் மீதும், இறை சட்டங்கள் மீதும் ஒரு கூட்டம் புழுதியை வாரி வீசுவதும் போன்ற பல சம்பவங்கள் நடந்தேறி விட்டன.
 
சவூதி அரசாங்கம் இதுபோன்று வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு மக்களை அழைக்கும் பொழுது அவர்களுக்கு அந்த நாட்டின் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும். குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைத்ததும் அவர்களை கண்ட மாதிரி மனிதாபிமானம் இல்லாமல் வேலை வாங்கும் சவூதி அரேபிய செல்வந்தர்களை பாரபட்சம் இல்லாமல் தண்டிக்க சவூதி அரசாங்கம் ஆவன செய்யவேண்டும். இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்துகிறோம் பேர்வழி என்று சொல்லி கொண்டு சட்டதிட்டங்களை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியாத வயதில் இருக்கும் ஒரு பெண்ணிற்கு தண்டனை வழங்கிய குற்றத்தை செய்திருப்பது சவூதி அரேபிய அரசே அன்றி இதில் இஸ்லாத்திற்கு யாதொரு பங்கும் இல்லை என்பதை புழுதிவாரி இறைக்கும் நடுநிலை தவறியோருக்கு தெரிவித்து கொள்ள ஆசைப்படுகிறேன். 
 thanks to anbu selvan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக