திங்கள், ஆகஸ்ட் 27, 2012

நீதிபதிகள் நாட்டை ஆளத் தேவையில்லை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி !

CJI- Judges should not rule nationபுதுடெல்லி:நாட்டை ஆள்வதும், கொள்கைகளை வகுப்பதும் நீதிபதிகளின் வேலையில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா தெரிவித்துள்ளார்.டெல்லியில் உள்ள இந்தியா இண்டர்நேசனல் செண்டரில் நேற்று(சனிக்கிழமை) நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு “Jurisprudence of Constitutional Structure” (அரசியல் சாசன கட்டமைப்பின் சட்டவியல்) என்ற தலைப்பில் எஸ்.ஹெச்.கபாடியா
ஆற்றிய உரையில் கூறியது:
நமது அரசியல் சாசன சட்டத்தில், நீதித் துறை, நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றுக்கான அதிகாரம் என்னென்ன என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நீதித்துறைக்கான அதிகாரத்துக்கு உட்பட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்க வேண்டும். நீதிமன்றங்கள் அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாக இருக்கக் கூடாது. கடந்த ஆண்டு யோகா குரு பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதம் தொடர்பான வழக்கில் “தூங்குவது மனிதனின் அடிப்படை உரிமை” என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். அதாவது, நடு இரவில் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தவர்களை போலீஸார் விரட்டியடித்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பொதுமக்களின் அடிப்படை உரிமையில் தலையிடுவது, அவர்களை துன்புறுத்துவதற்கு சமம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று நீதிபதிகள் ஆலோசனை கூறினால், அரசுகள் அதை ஏற்க மறுக்கின்றன. அப்படி செயல்படுத்த மறுக்கும்போது, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப் வழக்கு தொடுக்க முடியுமா? எனவே, நீதிபதிகள் சட்டத்துக்கு உள்பட்டு தீர்ப்புகளை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நீதிபதிகள் அல்ல. நாட்டை ஆள்வது நீதிபதிகளின் வேலையுமல்ல.
மத்திய, மாநில அரசுகளின் உறவுகள், மத்திய அரசின் கொள்கைகள் தொடர்பான வழக்குகளில் சட்ட விதிகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சுரங்க பணிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு காரணமாக, அப்பகுதியில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. எனவே, முக்கியமான வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கும்போது, நாட்டின் வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் கபாடியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக