புதன், ஆகஸ்ட் 29, 2012

திருக்குர்ஆன் பிரதி எரிப்பு, இறந்த உடல்களுக்கு அவமதிப்பு வழக்குகளில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு சிறைத் தண்டனை இல்லை !

No Charges in Quran Burning, Urination Videoவாஷிங்டன்:உலகில் ஜனநாயகத்தின் பாதுகாவலன் என வேடம் போடும் அமெரிக்காவில் நீதி எவ்வளவு கேலிக் கூத்தாக்கப்படுகிறது என்பது அவ்வப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. முஸ்லிம்களின் இறுதி வேதமும், உலக மனித சமூகத்திற்கு நல்லுபதேசமுமான புனித திருக்குர்ஆனின் பிரதிகளை எரித்த சம்பவம் மற்றும் கொலைச் செய்யப்பட்ட தாலிபான் போராளிகளின் உடல்களை அவமதிக்கும் விதமாக
அவர்களின் உடல்கள் மீது சிறுநீர் கழித்த சம்பவத்தில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு சிறைத் தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.
திருக்குர்ஆன் பிரதிகள் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை எரித்த சம்பவத்தில் 6 அமெரிக்க ராணுவ வீரர்களும், தாலிபான் போராளிகளின் இறந்த உடல்களில் சிறுநீர் கழித்து அவமதித்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்களுக்கும் தண்டனை வழங்கப்படுவதாக ராணுவம் அறிவித்த போதிலும் அத்தண்டனை நிர்வாக ரீதியான(administrative punishment) தண்டனை மட்டுமே ஆகும்.
நிர்வாகரீதியான தண்டனையின் படி பதவிக் குறைப்பு, அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
ஆஃப்கானின் வடக்கு காபூலில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தில் வைத்து அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் 53 திருக்குர்ஆன் பிரதிகள், 162 இதர நூல்கள் ஆகியவற்றை வெறிப்பிடித்து தீக்கிரயாக்கினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவம், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பெரும் மக்கள் திரள் போராட்டங்களுக்கு காரணமானது. இதில் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் கோபமடைந்த ஆஃப்கன் அதிபர் ஹாமித் கர்ஸாயி, குற்றவாளிகளை பகிரங்கமாக விசாரணைச் செய்யவேண்டும் என்று அமெரிக்காவிடம் வலியுறுத்தினார்.
அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவ வீரர்கள் தாலிபான் போராளிகளின் இறந்த உடல்கள் மீது சிறுநீர் கழித்த காட்சிகள் யூ ட்யூப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியானது அமெரிக்க ராணுவத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இச்சம்பவம் உண்மையானது என்றும், தொடர்புடைய அமெரிக்க ராணுவ வீரர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 3 தாலிபான் வீரர்களின் இறந்த உடல்கள் மீது நான்கு அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் சிறு நீர் கழிப்பதும், தரக்குறைவான வார்த்தைகளால் கிண்டலடிப்பதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில் இஸ்லாத்தை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணமோ, திருக்குர்ஆனுக்கு அவமரியாதைச் செய்யும் நோக்கமோ இல்லை என்று விசாரணை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் ப்ரியான் வாட்சன் கூறியுள்ளார்.
2011 மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆஃப்கானிஸ்தானில் நேட்டோ ராணுவத்தின் பணியாற்றிய 3-ஆம் பட்டாலியனைச் சார்ந்தவர்கள் தாம் நிர்வாக ரீதியான தண்டனையைப் பெற்றுள்ள ராணுவ வீரர்கள் ஆவர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என கருதிய வேளையில், நிர்வாகரீதியான தண்டனை மட்டும் வழங்கப்பட்டது வரும் நாட்களில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் வலுப்பெறும் என்பதை உணர்த்துகிறது.
தண்டனை நடவடிக்கைக் குறித்து ஆராய்ந்த பிறகு பதில் அளிக்கப்படும் என்று ஹாமித் கர்ஸாயியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக