இலங்கையின் நட்பு நாடுகளாக சீனா, பாக்.
இந்தப் பதில் தமிழ்நாட்டையும், தமிழர்களின் உணர்வுகளையும் மத்திய அரசு காயப்படுத்துகிறது என்று கருதத்தக்கதாகும். 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போருக்குப்பின், இலங்கை அரசு இந்தியாவை நட்பு நாடாகக் கருதுவதைவிட, சீனாவையும், பாகிஸ்தானையும் தான் நட்பு நாடுகளாகக் கருதிச் செயல்படுகிறது. தமிழர்களின் வடக்கு மாகாணத்தில் பலாலி, காரைநகர், மன்னார், ஆனையிறவு, தல்லாடி, முல்லைத் தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் இலங்கை அரசின் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை தளங்களை அமைத்துள்ளது. அந்த முகாம்கள் அங்கே அமைக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குடும்பங்கள் அங்கே தங்குவதற்குமான ஏற்பாடுகளையெல்லாம் சீனாதான் செய்து தருகிறது.
இலங்கை வரும் சீனா குழு
இதைப்பற்றி விவாதிக்க சீன ராணுவ அமைச்சர் லியாங் குவாங்ஜி என்பவர் 29-ந்தேதி இலங்கைக்கு வருகிறார். அப்போது அங்கே உயர்மட்ட ராணுவப் பிரதிநிதிகளின் கூட்டமும் நடைபெறவுள்ளது. மேலும் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதியன்று சீன மக்கள் காங்கிரசின் துணைத் தலைவர் யு பாங்கோ தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்றும் இலங்கைக்கு வருகிறது. அந்தக் குழுவிலே 96 சீன பிரதிநிதிகள் இருப்பார்களாம். இந்தக் குழு இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நேரில் பார்வையிட இருக்கிறார்களாம். இது மாத்திரமல்ல, இலங்கைக்கு சீனா 36 ஆயிரம் கோடி ரூபாய்ச் செலவில் 14 திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறது.
இலங்கை ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் பணிபுரிபவர்களின் குழந்தைகளை படிக்க வைக்க ஒன்பது கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கூடம் ஒன்றை சீனா கட்டிக் கொடுத்திருக்கிறதாம். சீனாவிடமிருந்து 59 கோடி ரூபாய் செலவில் எம்.ஏ. 60 ரக பயணிகள் விமானம் வாங்கிட இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகமான பல்வேறு உதவிகளை சீன நாடு, இலங்கைக்கு செய்து கொடுத்திருக்கின்ற நிலையில் இந்தியா எதை நம்பி இன்னமும் இலங்கை நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறதோ? இதை ஒரு தலை நட்பு என்றுதான் சொல்ல முடியுமே தவிர, இரு நாடுகளுக்கு இடையேயான சுமூகமான நட்பு என்று எப்படிச் சொல்ல முடியும்?
திருப்பி அனுப்புங்கள்
இந்தியப் பிரதமர் உடனடியாக இந்தப் பிரச்சினையிலே தலையிட்டு, ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ள கருத்தினை மறு பரிசீலனை செய்வதோடு, நீலகிரி மாவட்டத்தில் பயிற்சி பெறும் இரண்டு இலங்கை ராணுவ அதிகாரிகளை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிடவும், மீண்டும் இப்படிப்பட்ட ராணுவ பயிற்சிகள் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே அளிப்பதை உறுதியாகத் தவிர்த்திடவும் வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக