செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

சென்னை அரசு மருத்துவமனையில் எலி கடித்து பிறந்த பச்சிளங்குழந்தை மரணம். உறவினர்கள் அதிர்ச்சி !

திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்து இறந்த குழந்தையின் கன்னத்தில் காயம் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை எலி கடித்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை அருகே அயோத்தியா நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (24). மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கிறார். மனைவி மலர் (20). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. 8 மாத கர்ப்பிணியாக இருந்த மலருக்கு கடந்த
15-ம் தேதி இடுப்பு வலி ஏற்பட்டது.

அவரை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிசேரியன் மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 8 மாதத்தில் பிறந்ததால் குழந்தை 2 கிலோ மட்டுமே இருந்தது. இதனால், அதை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இங்குபேட்டரில் வைத்து கண்காணித்து வந்தனர்.
குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டது. அதற்காக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று மாலை குழந்தை திடீரென இறந்தது. உடலை பெறுவதற்காக ரஞ்சித்குமார் இன்று காலை உறவினர்களுடன் மருத்துவமனைக்கு சென்றார்.

குழந்தையின் கன்னத்தில் கீறியதுபோல காயம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எலி கடித்ததால் காயம் ஏற்பட்டதாக கூறி டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையையும் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இயக்குனர்கள் விசாரணை


இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகள் கூறுகையில், ‘‘குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று இருப்பதை அதன் பெற்றோரிடம் ஏற்கனவே தெரிவித்தோம். நோயின் தாக்கம் அதிகமானதால் குழந்தை இறந்தது. இதை அவர்களிடம் விளக்கி கூறினோம். குழந்தையின் உடலை ஒப்படைக்கும்போது  கன்னத்தில் காயம் இருந்தது. அது எலி கடித்ததால் ஏற்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இதுபற்றி மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு தகவல் தெரிவித்தோம். விசாரணை நடத்த 2 துணை இயக்குனர்கள் நியமிக்கபட்டுள்ளனர். விசாரணை முடிவில்தான் குழந்தை கன்னத்தில் உள்ள காயம் எலி கடித்ததால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து தெரியவரும்’’ என்றனர்.

மருத்துவமனை ஆர்எம்ஓ கூறுகையில், ‘‘குழந்தை இறந்ததும் செப்டீசிமியா என்ற நோய் தாக்கியுள்ளது. இதனால் குழந்தையின் கிட்னி பாதிக்கப்பட்டு, கன்னத்தில் சுருக்கம் ஏற்பட்டதுடன் தோல் உரிந்துள்ளது. எலி கடித்துள்ளதாக பெற்றோர் கூறும் புகார் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது’’ என்றார்.

பெற்றோர் சந்தேகம்

குழந்தையின் தந்தை ரஞ்சித்குமார் கூறுகையில், ‘‘நேற்று மாலை குழந்தையை பார்த்தோம். ஆரோக்கியமாக இருந்தது. ஒரு மணி நேரம் கழித்து குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். பெரிய டாக்டர்கள் இல்லாததால் உடலை காலையில் வாங்கிக் கொள்ளுமாறு கூறினர். இன்று காலை வந்து உடலை வாங்கி பார்த்தோம். குழந்தையின் கன்னத்தில் ஒரு பகுதியில் தோல் உரிந்து காணப்பட்டது. அதுபற்றி மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது நாயோ, பூனையோ கடித்திருக்கும் என்று பொறுப்பில்லாமல் சொல்கின்றனர். குழந்தை தானாக இறந்ததா அல்லது எலி கடித்து இறந்ததா என்ற சந்தேகம் உள்ளது. முழுமையான காரணம் தெரியாமல் உடலை வாங்க மாட்டோம்’’ என்றார்.

உடனடியாக உடலை ஒப்படைக்காதது ஏன்?

குழந்தை இறந்ததும் உடலை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்காதது ஏன் என்பதற்கு மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: இங்கு பிறக்கும் குழந்தை அல்லது சிகிச்சை பெறும் குழந்தைகள் மாலை அல்லது இரவு நேரத்தில் இறந்தால் பெற்றோரிடம் உடனடியாக ஒப்படைக்க மாட்டோம். உடலை பாதுகாப்பாக வைத்து மறுநாள் காலையில்தான் உறவினர்களிடம் ஒப்படைப்போம். இந்த குழந்தை நேற்று மாலை இறந்தாலும் கையெழுத்து வாங்குவது உள்ளிட்ட நடைமுறைகளை முடிக்க இரவாகிவிட்டது. அதனால்தான் காலையில் வந்து உடலை வாங்கிக் கொள்ளுமாறு கூறப்பட்டது.
குழந்தையின் உடல் தனி வார்டில் வைக்கப்பட்டிருந்தது. காலையில் உடலை ஒப்படைக்கும்போது குழந்தையின் கன்னத்தில் காயம் இருந்தது. குழந்தையை எலி கடித்து விட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். மருத்துவமனை ஊழியர்கள் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக