வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

ஒரே வாரத்தில் ரூ.36 கோடி வசூல் செய்தது ஒபாமாவுக்கு எதிரான பிரச்சார படம் !

மும்பை இயக்குனர் தயாரித்த, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிரான பிரசார படம், அதிக வசூலை ஈட்டி வருகிறது.அமெரிக்காவில் வரும் நவம்பர் 6ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிட உள்ளார். மசாசூசெட்ஸ் மாகாண முன்னாள் கவர்னரான மிட் ரோம்னி, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு தரப்பினரும், பிரசாரப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில், ஒபாமாவுக்கு எதிரான விமர்சனங்களைக் கொண்ட, டாக்குமென்டரி படத்தை, அமெரிக்க வாழ் இந்தியரான தினேஷ் டிசோசா உருவாக்கியுள்ளார்."தி ரூட்ஸ் ஆப் ஒபாமாஸ் ரேஜ்' என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியாகி பரபரப்பாக
விற்பனையாகி வரும் நூலை அடிப்படையாகக் கொண்டு இந்த டாக்குமென்டரி படம் உருவாக்கப்பட்டுள்ளது. "2016: ஒபாமாஸ் அமெரிக்கா' என்ற இப்படத்தில், அமெரிக்க அதிபராக ஒபாமா இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டால், ஏற்படும் விளைவுகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி சிந்தனைகளை, தந்தையிடம் இருந்து பெற்ற ஒபாமா, மீண்டும் அதிபரானால், பொதுவுடைமைவாதியாக மாறி, அமெரிக்காவை திவாலாக்கி விடுவார் என, இப்படத்தில் ஒபாமாவை நையாண்டி செய்துள்ளனர்.முந்தைய காலனி ஆதிக்கத்தில் இருந்து மீண்ட சுதந்திர அமெரிக்காவை, திவாலான அமெரிக்காவாக ஒபாமா எப்படி மாற்றுவார் என்றும் படத்தில் கற்பனையாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.வெளியிடப்பட்ட ஒரே வாரத்தில், "டாப் 10 மூவீஸ்' வரிசையில், ஏழாவது இடத்தை பிடித்த இப்படம், 1,800 தியேட்டர்களில் ஓடி, 36 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர் தரப்பில், குடியரசுக் கட்சியினர் இப்படத்தை பார்க்க ஆர்வமுடன் திரளுகின்றனர்.

இதற்கிடையே, புளோரிடா மாகாணத்தின் தாம்பா நகரில் நடக்கும் குடியரசுக் கட்சி மாநாட்டில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக, மிட் ரோம்னி நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக