ஞாயிறு, நவம்பர் 13, 2011

ஹஸாரே குழுவில் கருத்து வேறுபாடு உச்சக்கட்டம்: கெஜ்ரிவாலுக்கு எதிராக கிரண் பேடி !!!

புதுடெல்லி:பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்வதற்கு விமானங்களில் உயர்தர வகுப்புக்கான கட்டணத்தை வாங்கிவிட்டு அரசு சலுகையில் வழங்கப்பட்டுள்ள சாதாரண கட்டணத்தில் பயணம் செய்த சர்ச்சையில் சிக்கியுள்ள ஹஸாரே குழுவின் முக்கிய நபரான கிரண் பேடி கெஜ்ரிவாலின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த இயக்கத்தை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில், “கிரண் பேடி இப்படிச் செய்திருக்க கூடாது. இது தவறுதான். மீண்டும் இத்தகைய தவறு நடைபெறாது” என்று அவர் கூறியுள்ளார். “நானாக இருந்தால் கிரண் பேடி செய்த தவறை செய்திருக்க மாட்டேன்.
அதே நேரத்தில் கிரண்பேடி செய்தது, டெக்னிகலான தவறு மட்டுமே. அந்த தவறின் மூலமாக, தனிப்பட்ட முறையில் எந்தவித பண ஆதாயத்தையும் அவர் பெறவில்லை.
அன்னா ஹஸாரே குழுவை சேர்ந்தவர்கள் மீது அவதூறு பரப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது. அன்னா ஹஸாரேயை எங்களிடம் இருந்து பிரிப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகிறது,” என்றார்.
கேஜ்ரிவாலின் இந்த கருத்து கிரண்பேடியை கோபப்படுத்தியுள்ளது.
“எந்த விவகாரம் அல்லது விஷயத்திலும் கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் கொஞ்சம் யோசித்துப் பேசவேண்டும். ஒரு அறிக்கை அல்லது கருத்து கூறும் முன் பலமுறை யோசித்து விட்டு கேஜ்ரிவால் கருத்து கூற வேண்டும். தெரியாமல் பேசக் கூடாது. என் விஷயத்தில் என்ன நடந்தது என்று கெஜ்ரிவாலுக்கு தெரியாது,” என்று என்று கெஜ்ரிவாலுக்கு பதில் கூறியுள்ளார் கிரண் பேடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக