ஞாயிறு, நவம்பர் 13, 2011

ஸவுமியா படுகொலை வழக்கு: தமிழக வாலிபருக்கு மரணத்தண்டனை

திருச்சூர்:கேரள மாநிலம் கொச்சியை சார்ந்த ஸவுமியா என்ற இளம்பெண்ணை ரெயிலிருந்து தள்ளிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலைச் செய்த தமிழக வாலிபருக்கு கேரள நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சோரனூர் மஞ்சக்காடு பகுதியை சேர்ந்த ஸவுமியா என்ற பெண் கொச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி இரவு, எர்ணாகுளத்தில் இருந்து சோரனூர் செல்லும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்த போது ரெயில் பெட்டியில் அவர் மட்டும் இருப்பதை அறிந்த ஒரு வாலிபர் ரெயில் புறப்படும் போது அந்த பெட்டியில் ஓடிவந்து ஏறிக்கொண்டார்.
ரெயில் ஓடிக்கொண்டு இருந்த போது அந்த வாலிபர், ஸவுமியாவை கீழே தள்ளி விட்டார். இதில் ஸவுமியா படுகாயம் அடைந்த நிலையிலும் அந்த வாலிபரும் கீழே குதித்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் உயிருக்கு போராடிய ஸவுமியாவை, ரெயில்வே போலீசார் மீட்டு, திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் தீவிர சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 6-ம் தேதி ஸவுமியா மரணமடைந்தார்.
இந்த கொலைக்கு காரணமாக விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இரு தரப்பு வாதங்களும் முடிந்துள்ள நிலையில் குற்றாவளிக்கு இன்று திருச்சூர் கோர்ட் தீர்ப்பளித்தது.
எல்லா நிலையிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும், பெண்களுக்கு நிரந்தரமாக அச்சுறுத்தல் தொடர்வதாலும் குற்றவாளிக்கு மரணத்தண்டனை விதிப்பதாக திருச்சூர் முதல் எண் விரைவு நீதிமன்ற நீதிபதி கெ.ரவீந்தர பாபு தனது தீர்ப்பில் கூறினார். குற்றவாளிக்கு எவ்வித சலுகையும் அனுமதிக்க முடியாது. பல தடவை குற்றம் புரிந்து 8 தடவை தண்டனை அனுபவித்த பிறகும் குற்றவாளி சுயமாக திருந்த முயலவில்லை. அபூர்வத்திலும் அபூர்வமான வழக்கு இது என நீதிபதி கூறினார்.
ஸவுமியா கொலை வழக்கில் கைதுச் செய்யப்பட்ட கோவிந்தசாமி குற்றவாளி என கடந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கொலை, பாலியல் வன்புணர்வு, திருட்டு, குற்றகரமான அத்துமீறல், திருட்டிற்கு இடையே கொலை ஆகியன உள்பட இந்திய தண்டனை சட்டம் 302, 376, 397, 394, 447 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் 15 குற்றங்களை கோவிந்தசாமி மீது நீதிமன்றம் சுமத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக