புதன், நவம்பர் 16, 2011

போராட்டம் உச்சகட்டம்:குருதி களமாகும் சிரியா

டமாஸ்கஸ்:அரபு லீக்கின் சஸ்பென்சன், மேற்கத்திய நாடுகளின் தடை ஆகியவற்றால் சிரியா தனிமைப்படுத்தப்பட்ட பிறகும் சிரியா அரசு ராணுவ தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
அரசுக்கு எதிரான போராட்டம் துவங்கிய 8 மாதங்கள் கழிந்த சூழலில் கடந்த சில தினங்களில் இரத்த களரி மிகுந்த போராட்டங்கள் சிரியாவில் நடந்தேறின. 24 மணிநேரத்தில் 70க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமை அமைப்பான சிரியா அப்சர்வேட்டரியின் செய்தித் தொடர்பாளர் ராமி அப்துற்றஹ்மான் தெரிவிக்கிறார்.
கொல்லப்பட்டவர்களில் பகுதிக்கும் மேற்பட்டோர் சிரியா ராணுவத்தை சார்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து சிரியாவில் எதிர்ப்பு போராட்டமும் நடைபெறுகிறது என்பது தெரியவருகிறது. நேற்று முன் தினம் 23 பேர் தென்மேற்கு மாகாணமான தர்ஆவில் கொல்லப்பட்டனர். ஹும்ஸிலும் ஏராளமானோர் பலியாகினர்.
இதற்கிடையே,சிரியாவில் எதிர்ப்பாளர்களின் கூட்டமைப்பான சிரியா தேசிய கவுன்சிலின் பிரதிநிதிகள் தூதரக பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர். சிரியாவின் பிரச்சனையை தீர்ப்பதற்கு அரபு லீக்கின் பரிந்துரைகளை கடைப்பிடிக்க ரஷ்யா தேசிய கவுன்சில் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யாவின் பரிந்துரையை வரவேற்பதாக பிரதிநிதி குழுவின் தலைவர் புர்ஹான் காலியூன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக