புதன், நவம்பர் 16, 2011

பெட்ரோல் விலை 2 ரூபாய் 22 பைசா குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு நிலைத்தன்மை பெற்றுள்ளது உள்ளிட்ட காரணத்தினால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.22 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. கடந்த சிலநாட்களுக்கு முன், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் வி‌லை ஒரு ரூபாய் 80 பைசா உயர்த்தப்பட்டன. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்கட்சிகள் பலத்த ஆட்சேபம் தெரிவித்தன. தொடர்ந்து பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் சமூகமாக நடத்துவதில்பிரச்னை எழுந்தது. பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் பெ‌ட்ரோல் விலை உயர்த்தப்பட்டது சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்கட்சிகள் கூறின.

கடந்த பெட்ரோல் விலை உயர்வின் போது, சர்வதேச சந்தையில் பெட்ரோல் ஒரு பேரல் வி‌லை 121 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்தது. தற்போதைய அளவில் ஒரு பேரல் பெட்ரோல் விலை 115.8 அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது. அதேபோல், அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ. 50 என்ற அளவிலிருந்து ரூ. 49.20 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையை குறைக்க முன்வந்துள்ளன.

பெட்ரோல் விலை 2 ரூபாய 22 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து டில்லியில் பெட்ரோல் விலையில் 2 ரூபாய் 22 பைசா குறைக்கப்பட்டு ரூ.66.42 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். மும்பையில் 2 ரூபாய் 34 பைசா குறைக்கப்பட்டு ரூ.71.47 ஆக விற்கப்படும். கோல்கட்டாவில் 2 ரூபாய் 31 பைசா குறைக்கப்பட்டு ரூ.70.84 என்ற அளவில் விற்பனை செய்யப்படும். சென்னையில் 2 ரூபாய் 35 பைசாவும் குறைக்கப்பட்டு ரூ.70.38 ‌ என்ற அளவில் விற்பனை செய்யப்படும்.

பெட்ரோல் விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியன் ஆயில் கழக தலைவர் புடோலா, பெட்ரோல் விலை உயர்வுக்கு பின்னர், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் ஏற்பட்ட மாற்றங்கள், மற்றும் ரூபாயில் ஏற்பட்ட மாற்றங்களினால் நாங்கள் லிட்டருக்கு ஒரு ரூபாய் 85 பைசா அளவில் லாபம் கிடைத்தது. இதனை நாங்கள் நுகர்வோருக்கு அளிக்கிறோம் என கூறினார்.

பெட்ரோல் விலை, கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ரூபாய் என்ற அளவில் குறைக்கப்பட்டதற்கு பின்னர் தற்போது முத‌ல் முறையாக குறைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக