புதுடெல்லி:தரைப்படை தலைமை தளபதி பதவியை வகிக்கும் வி.கே.சிங் பதவி விலகும் வேளையில் அந்த பதவிக்கு பரிசீலிக்கப்படும் லெஃப்டினண்ட் ஜெனரல் பிக்ரம்சிங் போலி என்கவுண்டர் சிக்கலில் மாட்டியுள்ளார். 2001-ஆம் ஆண்டு கஷ்மீர் மாநிலம் அனந்தநாக்கில் நடத்திய ஒரு போலி என்கவுண்டர் பிக்ரம் சிங்கிற்கு தடையாக மாறியுள்ளது.
கஷ்மீரில் செக்டர்-5 இன் ராஷ்ட்ரீய ரைஃபிள் ப்ரிகேடராக இருந்த சிங் ஏராளமான மனித உரிமை மீறல்களை நடத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
கடந்த 2001 மார்ச் மாதம் 1-ஆம் தேதி கஷ்மீர் மாநிலம் அனந்தநாக்கில் ஒரு கஷ்மீர் தொழிலாளியை அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற பிக்ரம் சிங் பின்னர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவரை சுட்டுக் கொன்றதாக பொய் கூறினார். பிக்ரம் சிங் மீதான வழக்கு தற்போது ஜம்மு-கஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் உள்ளது.
கொலைச் செய்யப்பட்ட கஷ்மீர் தொழிலாளியின் தாயார் ஸைத்தூனா மற்றும் சகோதரி ஸனா பட்டும் உயர்நீதிமன்றத்தை அணுகியதை தொடர்ந்து இதுத்தொடர்பான உண்மை தகவல்கள் வெளியாகின. இவ்வழக்கில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இப்புகாரை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் ஜம்மு-கஷ்மீர் அரசுக்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
மீத்தன் சாச்சா என்ற பாக்.ஊடுருவல் காரர்தாம் கொல்லப்பட்டார் என ராணுவம் கூறியது. ஆனால், தனது மகன் குப்வாராவைச் சார்ந்த அப்துல்லா பட் என்பவர்தாம் கொல்லப்பட்டார் என ஸைத்தூனா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 70 வயதான காதிர்பட் என்பவர்தாம் அப்துல்லாஹ்வின் தந்தை ஆவார். கொலைச் செய்யப்பட்ட நபரின் உடலை தோண்டியெடுத்து டி.என்.எ(மரபணு) சோதனை நடத்தவேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. அப்துல்லாஹ் பட் கொல்லப்பட்ட பிறகு எடுத்த புகைப்படத்தை ராணுவம் அவரது குடும்பத்தினரிடம் காட்டவில்லை. அப்துல்லாஹ் பட்டை தவிர இரண்டுபேரும், இரண்டு ராணுவத்தினரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
போலி என்கவுண்டர் என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து போலீஸ் என்கவுண்டரை குறித்து விசாரணை நடத்தி பிக்ரம் சிங் குற்றவாளி இல்லை என கூறியது. ஆனால், இவ்வழக்கை விசாரித்த டி.ஜி.பி குல்தீப் கோடா என்பவர் ஏராளமான போலி என்கவுண்டர்களில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.
இவ்வழக்கை வருகிற பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக