சனி, ஜனவரி 28, 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி ஆணைய தலைவர் ஆய்வு !

கூடங்குளம் அணுமின் நிலையத்தில்
அணுசக்தி ஆணைய தலைவர் ஆய்வுகூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரையில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு  உள்ளனர். இதன் காரணமாக அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடர்ந்து தாமதமாகி வருகிறது. வருகிற மார்ச் மாதத்துக்குள் முதல் அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக போராட்டகுழுவினர் அடங்கிய மாநில குழுவுடன் மத்திய குழுவினர் 3 முறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 4-வது கட்ட பேச்சு நடத்த மத்திய குழு தயாராகி வருகிறது.
 
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று இந்திய அணு சக்தி ஆணைய தலைவர் ஸ்ரீகுமார்பானர்ஜி நாகர்கோவிலில் நூருல் இஸ்லாம் பல்கலைகழக விழாவில் பங்கேற்றார். இதன்பிறகு பிற்பகலில் அவர் கூடங்குளம் வந்தார். அவருடன் இந்திய அணுசக்தி ஆணைய மனித வள ஆற்றல் பிரிவு உறுப்பினர் அகர்கரும் வந்திருந்தார். பிற்பகல் 3 மணி அளவில் ஸ்ரீகுமார்பானர்ஜி அகர்கர் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி ஆகியோர் அணு உலையை பார்வையிட்டனர்.
 
அணு உலையின் பராமரிப்பு குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தனர். தற்போதைய நிலையில் போராட்டம் முடிந்தால் எத்தனை நாட்களில் அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்கலாம் என்று அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதன்பின்னர் பானர்ஜி, அகர்கர் இருவரும் திருவனந்தபுரம் புறப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக