ஞாயிறு, ஜனவரி 29, 2012

உ.பி.தேர்தல்:சமாஜ்வாதி கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் – டெல்லி இமாம் !

Samajwadi Party supremo Mulayam Singh with the Shahi Imam of Jama Masjid Maulana Syed Ahmed Bukhariலக்னோ:உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவேண்டும் என டெல்லி ஜும்மா மஸ்ஜிதின் ஷாஹி இமாம் மவ்லானா அஹ்மத் புஹாரி
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுடன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் டெல்லி இமாம். அப்பொழுது அவர் கூறியது:
“நாட்டில் முஸ்லிம்கள் வறுமையில் உழல்வதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். அதனால் உத்தரப் பிரதேசத் தேர்தலில் முஸ்லிம்கள் சமாஜ்வாதி கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாக முலாயம் சிங் உத்தரவாதம் அளித்துள்ளார். அதனால் சமாஜ்வாதி கட்சியின் வெற்றியை முஸ்லிம்கள் உறுதி செய்ய வேண்டும்.
முலாயம் சிங் என்னுடன் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அப்போது முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஆகவே மதச்சார்பற்றவர்கள் மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் முஸ்லிம்களுக்கு எதுவும் செய்யவில்லை. பாஜகவிடமிருந்து முஸ்லிம்களுக்கான நலன்களை எதிர்பார்ப்பது வீண்.
அயோத்தி இயக்கத் தலைவர் கல்யாண் சிங்குடன் கை குலுக்கியது குறித்து முலாயம் வருத்தம் தெரிவித்துவிட்டார். அதனால் அதை நாம் மறந்துவிடுவோம். முஸ்லிம்களுக்கு 4.5 சதவித இட ஒதுக்கீடு அளிப்பதென்பது அவர்களிடையே மோதல்களையும், ஜாதி துவேஷத்தையும் உருவாக்கும் முயற்சியாகும்.
மதரீதியாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக, பிற்படுத்தப்பட்டோர் என்ற வகையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மக்கள்தொகை அடிப்படையிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
சமாஜ்வாதி கட்சியின் கடந்த ஆட்சிக் காலத்தில் 14.6 சதவீத முஸ்லிம்களுக்கு காவல்துறையில் வேலை தரப்பட்டது” என்று இமாம் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் டெல்லி இமாமுடன் கலந்து கொண்ட முலாயம் சிங் கூறியதாவது: “முஸ்லிம்கள் மற்றும் இமாம் புஹாரி ஆகியோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிப்பேன். மத்தியில் ஆள்வோரைப் பொருத்த வரையில், பாஜகவை ஆதரிக்கமாட்டோம். எவ்வித நிபந்தனையுமின்றி காங்கிரஸ் கட்சியை ஆதரிப்போம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக