ஞாயிறு, ஜனவரி 29, 2012

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது !

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
 போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீசாரால் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நிறுத்தக்கோட்டை தாண்டி நிற்பது, வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல் குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.

புதிய அபராத கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்பட உள்ளது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு 100 ரூபாய் அபராத கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முதலில் இது 50 ரூபாயாக இருந்தது) ஹெல்மெட் அணியாமல் 2-வது முறை சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும். 3 பேருடன் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடமும் இதேபோன்று அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

பயமுறுத்தும் வகையில் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றால், முதல் முறை ரூ.1000, 2-வது முறை ரூ.2000 அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. நம்பர் பிளேட் இல்லாமல் கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்பவர்களுக்கு நாளை முதல் ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் அவர்கள் இதே தவறை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

செவியை பிளக்கும் வகையில் சிலர் ஹாரன் அடித்தபடி மோட்டார் சைக்கிளில் செல்வார்கள், இவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். காற்றை மாசுபடுத்தும் வகையில் கரும்புகையை கக்கி செல்லும் வாகனங்களுக்கும் இதே அளவு அபராதத் தொகை விதிக்கப்படும். காப்பீடு (இன்சூரன்ஸ்) இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று 34 வகையான விதிமீறல்களுக்கு நாளை முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக