வியாழன், ஜனவரி 26, 2012

கடலில் கலப்பதில் 30 சதவிகிதமே தமிழகத்துக்குப் போதும். 28 ஆண்டுகளாய் இழுத்தடிக்கும் வழக்கு !

நதி நீர் இணைப்பு என்பது நல்ல விஷயம். அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியாது. ஆனால், அது தொடர்பான ஒரு வழக்கே 28 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டு இருப்பதுதான் வேதனை!  கங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டு கரையோரக் கிராமங்களில் பெருத்த சேதம் ஏற்படுவதும், தென்மாநில நதிகளில் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் கருகிப்போவதும் ஆண்டாண்டு காலமாகத் தொடரும் பிரச்னை. அதனால்
, 'கங்கை - காவிரி நதிகளை இணைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை பலமாக எழுந்தது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இமயமலைப் பகுதி, தீபகற்பப் பகுதி என்று இரண்டாகப் பிரித்து நதி நீர் இணைப்பை செயல்படுத்த ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அந்த ஆட்சியிலும் அதற்கு பின் வந்த ஆட்சிகளிலும் நதி நீர் இணைப்பு என்று எல்லாரும் பேசுவார்கள். ஆனால், செயல் என்று பார்த்தால், எதுவும் நடந்திருக்காது.இதுதொடர்பான ஒரு பொதுநல வழக்கை 1983-ம் ஆண்டு தாக்கல் செய்தார் தி.மு.க. தேர்தல் பணிக்குழு உறுப்பினரும் வழக்கறிஞரு மான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அந்த வழக்கு இப்போதுதான் விசாரணைக்கே எடுக்கப்பட்டு உள்ளது.
''1983-ம் ஆண்டு தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் காவிரி நதி நீரைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பான பிரச்னை தலை தூக்கியது. 'நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போது ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தேன். கேரளாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து வீணாக அரபிக் கடலில் கலக்கும் நதிகளைத் தமிழகத்துக்குத் திருப்பினால், தென்மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள்’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தேன். அந்த மனு தொடர்பான இறுதி விசாரணை 94-ம் ஆண்டு நடந்தது.  விசாரித்த நீதிபதிகள், 'இந்த வழக்கில் பிரதிவாதியாக கேரள அரசு இருப்பதால், நாங்கள் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்கிறோம்’ என்றார்கள்.  
அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தேன். இரண்டு முறை நான் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி ஆகின. அந்த நேரத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நதிகள் இணைப்பின் அவசியம் குறித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் கடிதம் எழுதி இருந்தார். இரண்டையும் இணைத்து 2002-ம் ஆண்டில் பொதுநல வழக்காக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 'நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும். கங்கை - காவிரியை இணைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு வருவதில், காவிரியோடு கன்னியாகுமரி வரையில் ஓடும் அனைத்து நதிகளும் இணைக்கப்பட வேண்டும். கேரளாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து வீணாகக் கடலில் கலக்கும் நதிகளைத் தமிழகம் நோக்கித் திருப்பினால், தென் மாவட்டங்கள் பாசன வசதி பெறும். அரபிக் கடலில் கலக்கும் 2000 டி.எம்.சி. நீரில் 30 சதவிகிதம் வரை தமிழகத்துக்குக் கிடைத்தாலே, தமிழகத்துக்குப் போதுமான நீர் கிடைத்துவிடும்’ என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.  
உலகில் பல்வேறு நாடுகளுக்கிடையே பல நதிகள் ஓடுகின்றன. ஐரோப்பாவில் ரைன் நதியைப் பயன்படுத்துவது தொடர்பாக, ஜெர்மன், பிரான்ஸ், லக்ஸம்பர்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே சிக்கல்கள் எழுந்தன. ஆப்ரிக்காவில் நைல் நதி பங்கீடு தொடர்பாக சூடானுக்கும் எகிப்துக்கும் சிக்கல். டான்யூப் நதிப் பங்கீட்டில், ஆஸ்திரியா, துருக்கிக்கு இடையே சிக்கல். தென் அமெரிக்காவில் அமேசான் நதி நீர்ச் சிக்கல். ஆமுர் நதிப் பங்கீட்டில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் சிக்கல் என உலகம் எங்கும் நதி நீர்ப் பங்கீட்டுச் சிக்கல்கள் இருக்கின்றன.
நாடுகளுக்கு இடையே நதியைப் பகிர்ந்துகொள்​வதில் உருவாகும் கருத்து வேறுபாடுகளையும் சிக்கல்​களையும் தீர்த்துவைப்பதற்கு சர்வதேச நதிநீர்ச் சட்டங்கள் பயன்படுகின்றன. அதில் முக்கியமான விதிகள் 1956-ம் ஆண்டு பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற நதி நீர்ப் பங்கீடு குறித்த சர்வதேச அளவிலான மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டவை. இந்தச் சர்வதேச நதிநீர்ச் சட்டங்களை நடைமுறைப்​படுத்தவும் கண்காணிக்கவும் ஐ.நா. மன்றம் பல நடுவண் அமைப்புகளை உருவாக்கி உள்ளது.
இன்று சாதாரணமாகக் கிராமங்களில் சின்னஞ்சிறு ஏரிகள் மற்றும் குளங்களில் பாசன வசதி பெற்று விவசாயம் செய்பவர்கள் இடையேகூட, கடைமடைக்காரனுக்குத்தான் முன்னுரிமை என்ற வழக்கம் உள்ளது. அதையேதான் சர்வதேச நதிநீர்ச் சட்டமும் சொல்கிறது. ஒரு நதியின் கடைமடை டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அல்லது பயனாளர்களுக்குத்தான் அந்த நதியில் முன்னுரிமை. அவர்கள் அனுமதி இன்றி நதியின் மேல் பகுதியில் இருப்பவர்கள் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. 'நதியின் கீழ் நிலையில் உள்ளவர்கள் அனுமதி இல்லாமல், மேல் மட்டத்தில் உள்ளவர்கள் அணைகள் கட்டக் கூடாது. நதியில் கடைமடைப் பகுதியைப் பாதிக்கின்ற வகையில் நீரை செயற்கையாகத் தடுக்கக் கூடாது’ என்கிறது சர்வதேச நதிநீர்ச் சட்டம். இதன் அடிப்படையில்தான் பல நாடுகளில் நதிநீர்ப் பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன.
தமிழகத்துக்கான உரிமைகளைப் பெற வேண்டும் என்றால், ஹெல்சிங்கி மாநாட்டில் வகுத்த விதிமுறைகளை இங்கும் அமல்படுத்த வேண்டும். சுய அதிகாரம் பெற்ற நதி நீர் வாரியத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல்கள் தீரும்'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.
நதிநீர்ப் பிரச்னையில் மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை இதுவரை எடுத்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. அவர்​களது பதிலைப் பொறுத்து நீதிமன்ற உத்தரவு இருக்கும். நல்லதே நடக்கும் என நம்புவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக