வெள்ளி, ஜனவரி 27, 2012

குடியரசு தினத்தையொட்டி திகார் சிறையில் 2500 கைதிகளுக்கு தண்டனை குறைப்பு !

 புதுடெல்லி: குடியரசு தினத்தையொட்டி டெல்லி திகார் சிறையில் உள்ள 2500 கைதிகளுக்கு தண்டனை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில முதல்வர் ஷீலா தீட்சித் பிறப்பித்துள்ளார். நாட்டின் 63-வது குடியரசு தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும், அந்தந்த மாநில தலைநகர்களில் கவர்னர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு தண்டனை குறைப்பது வழக்கம். 

இந்த ஆண்டு திகார் சிறையில் உள்ள 2500 கைதிகளின் தண்டனை காலத்தை விதிமுறைகளின்படி குறைக்க மாநில முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை பெற்றவர்களுக்கு இரண்டு மாத தண்டனை குறைப்பும், 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றவர்களுக்கு 45 நாள் தண்டனை குறைப்பும், ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை தண்டனை பெற்றவர்களுக்கு ஒரு மாத தண்டனை குறைப்பும், ஒரு ஆண்டுக்கு குறைவான தண்டனை பெற்றவர்களுக்கு 15 நாள் குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் ஒழுக்கமாக நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த தண்டனை குறைப்பு பொருந்தும் என திகார் சிறை செய்தி தொடர் பாளர் சுனில் குப்தா தெரிவித்துள்ளார். டெல்லியை சேர்ந்த கைதிகளுக்கு மட்டும் இந்த சலுகை கிடைக்கும். திகார் சிறையில் உள்ள வெளிமாநில கைதிகளுக்கு இந்த சலுகை கிடையாது என குப்தா விளக்கம் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக