வியாழன், ஜனவரி 26, 2012

குடிகெடுக்கும் குடியரசு தின கொண்டாட்டம் !

வெள்ளையர்களின் அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15 தேதியை சுதந்திரதினமாக கொண்டாடுகிறோம்.  அது என்ன குடியரசு தினம்? சுதந்திரத்துக்கு பின்னால் நாட்டை ஆட்சி செய்ய  மக்கள் தேர்தல் மூலம் ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க அதற்க்கு தேவையான அரசியல் அமைப்புச் சட்டத்தை (Constitution)உருவாக்கிய 1950 ஜனவரி 26 தேதியைதான்  குடியரசு தினம் என்று கொண்டாடுகிறோம். என்ன பாழாப்போன சுதந்திரதினம், குடியரசு தினம் என்று கேட்க்க தோன்றுகிறதா? சுதந்திரம் இல்லாத ஒரு நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டங்கள். அரசியல் அமைப்பே செயல்படாத ஒரு நாட்டில் குடியரசு தின கொண்டாட்டங்கள். இது தேவையா?

ஆங்கிலயன் நம்மை அடிமைபடுத்தி வைத்திருந்தான் நமது வளங்களை எல்லாம் சுரண்டிஇங்கிலாந்துக்கு கொண்டு போகிறான் என்று சொல்லி வெள்ளையனே வெளியேறு என்று கோசம் எழுப்பினோம்.. சுதந்திரம் பெற்றோம். ஆனால் இப்போது நிலைமை என்ன?லண்டனில் வாழும் இந்திய வம்சாவளி வேதாந்தா நிறுவனத்துக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடிகள் வாழும் மலையில் இருக்கும் கனிமவளங்களை 'தானம்' கொடுக்க ஒருஉள்நாட்டு போரை நடத்தி வருகிறோம்.

இந்தியாவின் விளைபொருட்கள், கனிமவளங்கள், மக்களின் உழைப்பு அனைத்தையும் அந்நியன் சுரண்டுகிறான். மொத்தத்தில் இந்தியாவை கூறு போட்டு வெளிநாட்டுகாரர்களுக்கு விற்கும் வேலை திறம்பட செய்யப்படுகிறது. விவசாயிகளின் தற்கொலைகளினாலும், பசியினாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும்தினம்தினம் சாகும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பெருபான்மை  மக்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர். விரல் விட்டு எண்ணும் சில பணமுதலைகளை வைத்து இந்தியா முன்னேறி விட்டதாக ஒரு பொய் தோற்றத்தை காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர்.

வான்உயர்ந்த  கட்டிடங்கள், பிரமிக்க வைக்கும் தொழில்சாலைகள் இவைகள்தான் வளர்ச்சி என்று காட்டப்படுகிறது. இவைகளால் ஏற்ப்பட்ட பயன் என்ன? தொழில்சாலைகளால் அழிந்துபோகும் விவசாயம், குடிநீர், சுகாதாரம் என்று மக்களை நரகத்தில் (நகரம்) தள்ளுகின்றனர். போதிய சாலை வசதிகள் இல்லை, மருத்துவசதி இல்லை, சுகாதார வசதிகள் இல்லை. நாகரிகம் வளர்ந்த இந்த உலகில் திறந்த வெளிகளில் மலம், ஜாலம் கழிக்கும் ஒரு நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். மக்களுக்கு தேவையான கழிப்பறை வசதிகளை கூட செய்து கொடுக்க முடியாத நாட்டுக்கு எதற்கு குடியரசுதின கொண்டாட்டங்கள்.

வருடா வருடம் இதுபோன்ற வெற்று சடங்குகளுக்காக நாம் செலவழிக்கும் பணம் பல நூறு கோடிகள். இதை வைத்து மக்களுக்கு தேவையான முருத்துவமனைகள், கழிப்பிடங்கள் இப்படி எத்தனயோ நல்ல விசயங்களை செய்யலாம். அரசு விழாக்களையும், ஆட்சியாளர்கள் செய்யும் ஆடம்பரங்களையும் குறைத்தால் அதில் இருந்து எத்தனையோ நல்லகாரியங்களை செய்யமுடியும். மக்கள் வரிப்பணத்தை வைத்து இதுபோல் செய்யப்படும் ஆடம்பரங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சுதந்திர தினத்தையோ, அல்லது குடியரசு தினத்தையோ கொண்டாடுவதில் எந்த பெருமையும் இல்லை.

சுதந்திரத்தின் உண்மையான பலன்களை மக்கள் அனுபவிக்க வேண்டும். நாட்டுக்குத்தான் சுதந்திரம் கிடைத்திருக்கிறதே தவிர மக்களுக்கு இல்லை. அரசியல் அமைப்புசட்டங்கள் பணக்காரர்களுக்க்கும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சேவை செய்வதற்கு  மட்டுமே பயன்படுகிறது.  காவல்துறை, உளவுத்துறை மற்றும் அரசு இயந்திரங்கள் ஏழை, எளிய மக்களின் சுதந்திரத்தை பறித்து அவர்களை ஒருவித அடக்குமுறைக்கு உட்படுத்தி வருகின்றன. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய ஏழை எளியமக்களின் வாழ்க்கைதரம் மேன்படாமல் பணக்கார, அதிகாரவர்க்கம் மட்டும் மேன்மை பெரும் ஒரு நாட்டில் மக்களுக்கு என்ன? சுதந்திரம் தினம், குடியரசு தினம் வேண்டி கிடக்கிறது.

உழைக்கும் மக்கள் வருடம் முழுவதும் உழைத்து விட்டு உழைப்பவர் தினத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். உழவர்கள் ஆண்டு முழுவதும் உழைத்து விட்டு உழவர்தினம்கொண்டாடுகின்றனர். அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். எதற்கு இந்த வீணான சுதந்திர தினமும், குடியரசு தினமும் இவர்கள் எதை சாதித்து விட்டு இதை செய்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. மக்களுக்கு என்று? உண்மையான விடுதலையோ அதுவே உண்மையான சுதந்திர தினம். என்று குடிமைக்கள் அனைவரும் சமம் என்று நடுநிலையோடு ஆட்சி செய்யப்படுகிறார்களோ அன்றே உண்மையாக குடியரசு தினம்அதை விட்டு விட்டு வெறும் (Aug15, Jan26) தேதிகளை கொண்டாடி எந்தப்பிரோஜனமும் இல்லை. 
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக