புதன், ஜனவரி 25, 2012

கட்சிக்காக உழைத்தும் பதவி பறிப்பு..மதுரை அதிமுக பிரமுகர் சென்னையில் தீக்குளித்து மரணம் !

MGR Samadhi
 சென்னை: கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தும், தனது உழைப்பைப் புறக்கணிக்கும் வகையில் கட்சிப் பதவியை நிர்வாகிகள் பறித்ததால் வேதனை அடைந்த, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், சென்னைக்கு வந்து எம்ஜிஆர் சமாதியில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாதரையைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் அந்த ஊர் கிளைக் கழக செயலாளராக இருந்து வந்தார். சமீபத்தில் இவரை பதவியிலிருந்து நீக்கி விட்டனர். இதனால் மன வேதனை அடைந்தார் நாகேந்திரன்.

இந்த நிலையில் சென்னைக்கு வந்தார் நாகேந்திரன். இன்று காலை ஆறரை மணியளவில் எம்ஜிஆர் சமாதிக்கு வந்தார். அப்போதுதான் நுழைவாயில் திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்ற அவர் சமாதியை சுற்றிப் பார்த்தார். பின்னர் புல் தரையில் அமர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து பையில் இருந்த கேனை எடுத்தார். அதில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் அலறினார். பின்னர் எம்ஜிஆர் வாழ்க என்று கோஷம் போட்டபடியே அங்கும் இங்கும் ஓடினார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த பாதுகாவலர் வஜ்ஜிரம் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். பின்னர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.

போலீஸார் நாகேந்திரனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் நாகேந்திரன்.

நாகேந்திரன் வைத்திருந்த பையில் சில மனுக்கள் இருந்தன. தன்னைப் பற்றிய விவரத்தையும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் மாவட்ட நிர்வாகிகள் குறித்தும் அவர் ஏகப்பட்ட புகார்களை எழுதி வைத்திருந்தார்.

உசிலம்பட்டியில் பலரை கட்சியில் இணைத்துள்ளாராம் நாகேந்திரன். ஆனஆல் அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படவில்லை. மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது சரியாக பதில் கூறவில்லை என்றும் கட்சிக்காக இத்தனை ஆண்டுகள் உழைத்தும் பயனில்லையே என்ற மனவருத்தத்தில் தீக்குளித்தாகவும் போலீசாரிடம் நாகேந்திரன் கூறியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் சென்னையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக